ஆச்சி

ஆச்சி, கவிஞர் கண்ணதாசன், பக். 207, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-587-2.html

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வழக்காறுகள், மரபுகள், மாண்புகள், சமூக யதார்த்தம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த உரைநடைச் சித்திரம்தான் கவியரசு கண்ணதாசனின் ஆச்சி நாவல். இந்நாவலில் பயின்று வருகிற சீதை ஆச்சி, தண்ணீர்மலையான், பெரியகருப்பன், ராமநாதன், தெய்வானை, அன்னபூரணி, மெய்யம்மை ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரமும் செட்டியார் மரபின் அழுத்தமான வார்ப்புகள். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை இத்தனை இயல்பாகவும் எளிமையாகவும் பதிவு செய்திருக்கும் படைப்பைப் பார்ப்பதரிது. வர்த்தகரீதியாக செட்டியார்களுக்கும் மலேசியாவுக்கும் இடையே இருந்த தொடர்பு, சீதனப் பணத்தைக் கூட வட்டிக்கு விட்டு பணத்தைப் பெருக்கும் செட்டியார்களின் இயல்பு என செட்டியார்களின் வாழவியலை மிகையின்றிப் புட்டுப்புட்டு வைக்கிறார் கவிஞர். செட்டியார்கள், இப்படித்தான் வாழோணும் என்கிற பிடிவாதத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து மாயும் சீதை ஆச்சி ஒரு நிகரற்ற பாத்திரப்படைப்பு. பாரம்பரியமான மரபில் ஊறித் திளைத்த சீதை ஆச்சிக்கும் மாறிவரும் தலைமுறைகளின் அடையாளங்களான அவர்களது பிள்ளைகளுக்கும் இடையிலான முரண்பாடுதான் கதையின் மையம். மொத்தத்தில் ‘ஆச்சி – நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்வியலை விவரிக்கும் நடைச்சித்திரம்.’  

 

தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் (பாகம் – 2), தமிழண்ணல், பக். 264, செல்லப்பா பதிப்பகம், மதுரை – 1. விலை ரூ. 150

தொல்காப்பியர் தமிழின் இயல்பறிந்து இலக்கணம் எழுதியவர். தமிழ் ஓர் இயற்கை மொழி. அம்மொழி எப்பொழுது தோன்றியதென அறிய இயலாத அத்துணைத் தொன்மைஉடையது. தொல்காப்பியர் குறிப்பிடும் கோட்பாடுகள் அனைத்தும் உள்ளுறை, இறைச்சி,  மெய்ப்பாடு, நோக்கு ஆகிய நான்கும் முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பாகமான இதில் முன்னம், வண்ணம், வனப்பு, யாப்பு, பண்ணத்தி, அங்கதம், தொன்மம், முரண், பயன், எச்சம், களன், மாட்டு, அணி, தூக்கு போன்ற இலக்கியக் கொள்கைகளைத் தொல்காப்பியர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைத் தமிழண்ணல் மிக அழகாக – விளக்கமாக விளக்கியுள்ளார். தமிழை நேசிப்பவர்களிடமும், இலக்கிய – இலக்கண மாணவர்களிடமும் கையேடாக இருக்கவேண்டிய நூல். நன்றி: தினமணி 10-12-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *