ஆறா வடு

ஆறா வடு, சமயந்தன், தமிழினி பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ.

ஈழப்போரின் துயரமான பக்கங்கள் போர் பின்னணியிலான கதையுடன் அதிர்ச்சியும் பதற்றமும் ஊட்டும் ஈழ இலக்கியத்தின் முக்கியமான நாவல். எண்பதுகளில் தீவிரமான ஈழத்தமிழர் அரசியல் பிரச்சனையின் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன. இலங்கை அரசாங்கத்தினை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய தமிழர் இயக்கங்களின் செய்றபாடுகள், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறை, இந்திய அரசின் அமைதிப்படை உள்ளிட்ட நடவடிக்கைகள் எனத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் அளவற்றவை. ஈழத்தில் தமிழின விடுதலையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சயந்தனின் ஆறா வடு நாவல் பதிவாக்கியுள்ளது. ஒருவகையில் சமூக ஆவணமாக விளங்குகிறது. சின்னத் தீவான இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இருமொழி பேசுகின்றவர்களிடையே உருவாக்கப்பட்ட அரசியல் முரண் காரணமாகக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கேது? போர் என்றாலே ரத்தம் சிந்தும் அரசியலில் மனித உயிர்களின் இழப்பினுக்கு மதிப்பு எதுவுமில்லை. அரசின் வன்முறை ஒருபுறம், இயக்கங்களின் அதிகாரம் இன்னொருபுறம் என்ற சூழலில் சராசரி மனிதர்களின் வாழ்க்கை அர்த்தமிழக்கிறது. 1987 முதல் 2003 வரையிலான ஈழத்துப் போராட்டச் சூழலை விவரிக்கும் ஆறா வடு நாவல், அன்றைய சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகும். இந்தியா ராணுவம் இலங்கை மண்ணில் காலடி வைத்தபோதும், ரணில் விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தையின்போதும் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற்படுகிறது. ஆனால் அரசியல் நெருக்கடிகள் அமைதியைச் சீர்குலைக்கின்றன. இளைஞர்கள் சூழலின் வீச்சினால் போராட்டத்தில் ஈடுபட நேரிடுகிறது. இலங்கையிலிருந்து ஐரோப்பாவிலுள்ள இத்தாலி நாட்டிற்கு வள்ளம் எனப்படும் பெரிய படகினில் அறுபத்து நான்கு பேர் கள்ளத்தனமாகக் கடலில் பயணிப்பதுடன் கதை தொடங்குகிறது. ஏஜென்சி காரரிடம் இருபது லட்சம் பணம் தந்த, போரில் காலை இழந்த முன்னாள் விடுதலைப்புலியான அகிலனின் நினைவுகள் பின்னோக்கி மிதக்கின்றன. ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சொந்த மண்ணை விட்டுக் கிளம்பி எப்படியாவது வெளிநாட்டிற்குப் போய்விட்டால் உயிராவது மிச்சமாகும் என்று நம்புகின்றனர். ஆனால் ஆழமான கடலில் மாதக் கணக்கில் பயணித்து இத்தாலிக்குப் போய்ச் சேருவதிலும் உத்திரவாதம் எதுவுமில்லை. போரினால் சொந்த நாட்டிற்குள் புலம்பெயரும் மக்களின் நிலை துயரமானது. குறைந்த உடைமைகளுடன் எங்கோ ஒரிடத்தில் இளம் பெண்களுடன் தங்கிட நேரிடுவது பாதுகாப்பற்றது. இயக்கத்தினரைத் தேடுகிறேன் எனச் சிவில் வாழ்க்கையில் நுழையும் ராணுவத்திடமிருந்து பெண்களைப் பாதுகாப்பது என்பது எப்பொழுதும் பிரச்சனைதான். சூழலின் நெருக்கடி காரணமாக ஆயுதமேந்திய பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள்கூட சிங்களப் பேரினவாத அரசினால் கொல்லப்படுகின்றனர். அரசின் ராணுவத் தாக்குதலினால் யாழ்ப்பாணத்தை விட்டுக் கிளம்பும்போது, பாரிசவாயு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கவியலாத வயதான தாயினைக் கைவிட நேரிடுகிறது. எல்லாவிதமான விழுமியங்களும் சிதைகின்றன. எப்பொழுது, என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் வாழ நேரிடுவது துயரத்தின் உச்சம். சிறுபான்மையினரான தமிழர்களை இரண்டாந்தரமாக நடத்தும் சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளினால் உருவான விடுதலைப்புலிகளை மக்கள் ஆதரிக்கின்றனர். எனவேதான் வெற்றி போன்ற போராளியினால் மக்களிடையே தண்ணீரில் மீனைப்போல வாழ முடிகிறது. என்றாலும் மாறும் அரசியல் சூழல் காரணமாக இயக்கங்களிடையிலான மோதல்களினால் இளைஞர்கள் வலுத்தவர்களுடன் சேர்கின்றனர். எல்லாவற்றுக்கும் துப்பாக்கி, கிரனைடு எனப் பழகியவர்கள் எதிராளியை எளிதாகக் கொல்கின்றனர். மக்களுக்காக ஆயுதம் ஏந்தி உயிரைத் துச்சமாகக் கருதிப் போராடியவர்கள், நாளடைவில் அவர்களையே அதிகாரம் செய்கிறவர்களாக மாறுகின்றனர். ஒருநிலையில் மக்களிடமிருந்து அந்நியப்ப்டுகின்றனர். போரும் அடக்குமுறையும் அதிகாரமும் ஈழத்தமிழர் வாழ்வில் ஆறாத வடுக்களை உருவாக்கியுள்ளன. ஈழப்பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசியல்வாதிகள் பல்லாண்டுகளாக நடத்தும் வெற்று அரசியலுக்கு மாற்றான விஷயங்களைச் சயந்தன் முன்வைத்துள்ளார். வெறுமனே துயரங்களைச் சொல்வது சயந்தனின் நோக்கமல்ல. மனிதர்கள் ஒருவரையொருவர் விரட்டிக் கொல்வது ஏன் என்ற கேள்வி தோன்றுகிறது. தமிழர் வீரம் என்ற அரசியல் புனைவை கேள்விக்குள்ளாக்கி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் ஆறா வடு ஈழப்போரின் ஆவணமாகவும் விளங்குகிறது. நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *