கலாம் ஒரு சரித்திரம்

கலாம் ஒரு சரித்திரம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 180ரூ.

மக்களின் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், இளைஞர்களின் வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்ச, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. இன்னொரு மகாத்மாவாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வரலாற்றை கலாம் ஒரு சரித்திரம் என்ற தலைப்பில் அமுதன் எழுதியுள்ளார். ராமேசுவரத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, இந்திய ஜனாதிபதியாக உயர்ந்து, அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மாணவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைகளை விதைத்த அப்துல் கலாம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த நூலில் எளிமையாகயும், சுவையாகவும் ஆசிரியர் விவரித்துள்ளார். வேலைக் கிடைக்காத விரக்தியில் இமயமலைக்குச் சென்று சுவாமி சிவானந்தாவைச் சந்தித்து, சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய அவரது உறுதிப்பாடு, திருமணம் செய்து கொள்ளாது ஏன்?, விபத்தில் இருந்து இரண்மு முறை தப்பிய சம்பவம், உயர்ந்த பதவியில் இருந்தபோது மதுரையில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளிகளுடன் வரிசையில் நின்ற எளிமை போன்ற எண்ணற்ற ருசிகர தகவல்கள் இந்த நூலில் காணலாம். மேலும் கலாமின் அண்ணன் மகள் நசீமா, அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், பேரன் ஷேக் சலீம், பேத்தி நாகூர் ரோஜாவின் நெஞ்சை நெகிழ வைக்கும் பேட்டி. கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், விவேக் ஆகியோர் பகிர்ந்து கொண்ட மனதைத் தொடும் நினைவலைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. அபூர்வ வண்ணப் படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும்இளைஞர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு. கலங்கரை விளக்கம். நன்றி: தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *