கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ.

செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. இது நூலாசிரியரின் ஆய்வு நுட்பத்தை உணர்த்துகிறது. கவரி என்னும் முதல் கட்டுரை, கவரி என்பது ஒருவகை மானா, எருமையா, அன்னமா என்னும் வினாக்களை எழுப்பி, விடையாக, கவரி என்பது குட்டைக்கால்களும் குட்டைக்கழுத்தும் குட்டைக்காதும் குட்டை வாலும் கொண்ட எருமைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு என்று முடிவையும் கூறியுள்ளார். மேலும் இந்த விலங்கு வாழும் இடங்களையும், அவற்றிற்கே உரிய சிறப்புக்களையும், கவரியின் படங்களையும் தந்துள்ளார். ‘கேரள உணவுப் பண்பாடும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களும்’ என்னும் கட்டுரை, செவ்வியல் இலக்கியங்களில் காணப்படும் உணவு வகைகளில் சில, கேரளத்தில், புழக்கத்தில் உள்ளதை, மலையாள இலக்கியங்களின் வாயிலாகவும், கேரள மக்களின் உணவு பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் நிறுவுகிறது. இந்த கட்டுரையின் முடிவிலிருந்து, செவ்விலக்கியங்களை அணுகும்போது, கேரள மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் பார்க்காமல் ஆராய்ந்தால், சிறந்த முடிவு கிடைக்காது என்பதை அறியலாம். ‘கருமையின் உயர்வு காட்டும் தமிழ்ப் பெயர்கள்’ என்னும் கட்டுரை, வண்ணன் என்னும் வருமொழியுடன் கருமையைக் குறிக்கும் பல பெயர்கள், நிலைமொழியாக வந்து, திருமாலைக் குறிக்கும் புதுப்பெயர்கள் தோன்றுகின்றன என்கிறது. அவற்றை இன்றைய குழந்தைகளுக்குச் சூட்டலாம் என்கிறார். மேலும் கருமை அமங்கலம் என்ற கருத்து, மேனாட்டாரின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நூலாசிரியர் தெரிவிக்கிறார். ‘காளமேகம் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூக மதிப்பீடுகள்’ கட்டுரையில், கவி காளமேகம் காலத்திய ஜாதிகள், ஜாதி மீறி திருமணம் செய்வது, அவர் காலத்தில் இருந்த நோய்கள் என, சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு அனைத்துக் கட்டுரைகளும், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக விளங்குகின்றன. இந்த நூல், இளம் ஆய்வாளர்களுக்குப் புது ஆய்வுச் சிந்தனைகளை நல்கும். -முனைவர் இராஜ. பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், 10/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *