சட்டமும் சாமானியனும்
சட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ.
ஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் உன்னிகிருஷ்ணன் வழக்குகளில், ஆரம்பக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 2002ல்தான் அரசியல் சாசனத்தில், அடிப்படை உரிமைக்காக அங்கீகாரம் பெற்றது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு பின், கட்டாயக்கல்வி உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற கட்டுரையில், ஆசிரியர் கோபக்கனலை வீசுகிறார். பல தகவல்களை ஆய்வு செய்கிறார் ஆசிரியர். நன்றி: தினமலர், 29/12/2012.
—-
மரங்களின் கதைகள், மேனகா காந்தி, தமிழில்-சுப்ர. பாலன், மணிவாசகர் நூலகம், பக். 208, விலை 100ரூ.
பிரம்மாவின் தலைமுடிக் கற்றைகள்தான், மரங்கள் என்றொரு ஐதீகம் உண்டு. இயற்கை ஆர்வலரான மேனகா காந்தி மரங்களின் அருஞ்சிறப்புகள் பற்றி, பிரம்மாஸ் ஹர் என்னும் தலைப்பில் எழுதிய, ஆங்கில நூலை, சுப்ர, பாலன் தமிழாக்கம் செய்துள்ளார். வில்வம், தேக்கு, நாவல், வாழை, ஆலமரம், அரச மரம் என, 30 வகை மரங்களின் அருமை பெருமைகளை விவரிக்கிறது இந்நூல். பல்வேறு வகை மலர்ச் செடிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மலர்கள், மரங்கள் தொடர்பான தெய்வீகக் கதைகள் பலவும் இடம் பெற்றுள்ளன. ஓவியர் வேதா வரைந்த படங்கள் சிலவும் உள்ளன. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 17/3/2013.