திருப்புகழ்

திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ.

அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர்! மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சிறப்பாக, அருணகிரிநாதர் முதலில், ஒரு பெண் பித்தராக அலைந்தார் என்ற கருத்தை உடைத்து எறிந்திருக்கிறார். அருணகிரியார் பிறவியிலேயே பெரும் ஞானி, தூய அறவாழ்வு வாழ்ந்தவர். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்று பெரும் ஆசைகளில், பெண்ணாசையே மகா மோசமானது. அது ஒருவனது செல்வத்தையும், ஆராக்கியத்தையும் அறவே அழித்து நடைப்பிணமாக்கி விடும் என்பதை நன்கு உணர்ந்தவர். பல திருப்புகழ் பாடல்களில், மங்கையர் பற்றிய சிருங்கார வர்ணனைகளும், அவர்கள் தரும் சுகத்தை விவரிக்கும் சொற்ஜாலங்களும், படிப்பவர் மனதில் அருணகிரியாரை ஒரு பெண் பித்தராகவே தோற்றுவிக்கும். இப்படி பல வகைகளில் மாதர் இன்பத்தை நுகர்ந்து, இறுதியில் வருந்தி இறைவனின் மன்னிப்பை வேண்டி, தன் தவறுகளைப் பொறுத்தருளி நற்கதி நல்க வேண்டும் என்று மன்றாடுகிறார். முருகனும் அருள்பாலிக்கிறார். பொருட்பெண்டிர் மோகத்தால் மூழ்கித் திளைக்கும் ஒருவனது அனுபவங்களை, தமது சொந்த அனுபவம்போல் பாவித்து, திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டனவேயன்றி, அருணகிரியாரின் அனுபவங்கள் அல்ல. இதே கருத்தை தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளையும், பாம்பன் சுவாமிகளும், கி.வா.ஜ., வும், வாரியார் சுவாமிகளும் பிரதிபலித்திருக்கின்றனர். நூலின் பிற்பகுதியில் தேர்ந்தெடுத்த சில முருகனடியார்கள் வரலாற்றையும் தந்திருக்கிறார் ஆசிரியர். அவர்களில், மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த, ஆண்டவன் பிச்சை என்று தன்னைக் கூறிக்கொண்ட மரகதம் என்ற பெண்மணியின் சரிதம் மிகவும் வியப்பானது. உள்ளம் உருகுதையா முருகா, உன் எழில் காண்கையிலே என்ற பாடல் டி.எம், எஸ்., சின் வெண்கலக் குரலில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்துப் பிரபலமான ஒன்று. அதை இயற்றியர் இந்தப் பெண்மணிதான். மிக எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ள இந்த நூல், முருகனடியார்களுக்கு நல்விருந்து. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 25/10/2015.

Leave a Reply

Your email address will not be published.