தீராத விளையாட்டு விட்டலன்

தீராத விளையாட்டு விட்டலன், அருண் சரண்யா, பக். 240, கல்கி பதிப்பகம், சென்னை – 32. விலை ரூ. 200

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மகாபக்தர்களின் சரிதங்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியச் செய்பவை; நம்மை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துபவை. பண்டரிபுரத்தில் அருளாட்சி புரியும் பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களின் சரிதத்தை நூலாசிரியர் அற்புதமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார். கண் கவரும் வேதாவின் ஓவியங்களும், ஸ்ரீஹரியின் புகைப்படங்களும் இந்நூலுக்கு மெருகு சேர்க்கின்றன. நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் மறுபிறப்பான நாமதேவர், மராத்திய இலக்கியச் சிற்பிகளுள் ஒருவரான ஞானேஸ்வரர், இசையுலகின் பிரம்மா புரந்தரதாசர், சிவாஜியின் குருநாதர்கள் சமர்த்த ராமதாசர், துக்காராம், கணிகையர் குலத்துதித்த பக்த கணோபாத்ரா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட மகான்களின் திவ்ய சரிதமும் அவர்களுடன் விட்டலன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் நிறைந்த நூல் இது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய அற்புதமான புத்தகம்.  

 

சேக்கிழாரும் இசைத் தமிழும், ம.அ. பாகீரதி, பக். 112, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 113. விலை ரூ. 50

சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறைகளில் இறுதித் திருமுறையாக விளங்குவது சேக்கிழார் அருளிய பெரியபுராணம். பெரியபுராணத்தில் உள்ள இசைக் குறிப்புகளை ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார், இசைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றி வரும் ம.அ. பாகீரதி. பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் பண்கள், பாடல்கள், இசைக் கருவிகள் பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டவிதம் என பலவற்றையும் தனித்தனி தலைப்புகளில் விரிவாக விளக்கியுள்ளார், குறிப்பாக, ஆனாய நாயனாரின் வரலாற்றைக் கூறும் பாடலொன்றில் பண் பற்றி சேக்கிழார் குறிப்பிடும் ‘தாரமும் உழையும் கிழமை கொள்ள’ என்ற வரியை எடுத்துக்கொண்டு (பக்.18) ‘உழை’ என்பது ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு கோவைகளில் ‘ம’ என்ற கோவையைக் குறிக்கும் என்று குறிப்பிட்டு அதன் பொருள் ‘இணை’ என்பதை விளக்கியிருப்பதுடன் ஏழு கோவைகளுக்கும் இணைக் கோவைகளையும் பட்டியலிட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. பெரிய புராணக் கருத்துகளை மட்டுமல்லாது, பெரியபுராணத்துக்கு மூல நூலான சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத்தொகை பற்றியும், அந்நூலின் வழி நூலான திருத்தொண்டர் திருவந்தாதி பற்றியும் விரிவாக விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி: தினமணி 17-12-12              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *