நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு.

கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை இறுக மூடாமல் இருக்க மாட்டீர்கள் என்ற வரிகள் அத்தனை உண்மை. மூலநூலிலேயே இல்லாத குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டு, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை, தரமாக தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் சுரேஷின் உழைப்பு, தலைமுறைகள் கடந்தும் நிற்கும். நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.  

—-

 

நம் ஊன் உடம்பு ஓர் ஆலயம், அ.சொ.சுப்பையா, மீனாட்சி பதிப்பகம், 3, அனந்தராயன் தெரு, சிதம்பரம் 1, பக். 184, விலை ரூ.155.

உடம்பே இறைசவன் விரும்பிக் கோயில் கொள்ளும் இடமாகும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியா என்றார் அப்பரடிகள். நம் உடலில் இறைவன் கோயில் கொண்டுள்ள திறத்தை பல அருளாளர்களும் அடியார்களும் பாடியுள்ளனர். இறைவனைப் போற்றி வழிபடத்தக்க மிகச்சிறந்ததொரு கருவி. மானிடப் பிறப்பில் வாய்த்த இந்த உடம்பேயாகும். இதனை விளக்கமாக விளக்கவே இந்நூலில் இடம்பெற்றுள்ளன, நம் உடம்பு ஓர் இன்பச் சுரங்கம், ஓர் அற்புதப்படைப்பு, ஓர் பஞ்சகோச வடிவமைப்பு, ஓர் ஆலயம் என்னும் முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு ஒவ்வொரு தலைப்புகளின் உள்ளேயும், மூதாதையரின் கூர்மதி, ஐம்பூதங்களின் கட்டமைப்பு, அண்டமும் பிண்டமும், ஈரேழு பதினான்கு உலகங்கள், உயிர் ஓர் விளக்கம், ஒடுங்கு களம், இன்ப ஊற்று, நம் உடம்பு ஓர் மருத்துவமனை, உடம்பு ஓர் மருத்துவமனை, உடம்பு ஓர் சிறைச்சாலை, உடம்பை வளர்க்கும் உபாயம், பஞ்சகோச அமைப்பு, குருவருளும் திருவருளும், மூலப்பொருளின் சிறப்பு, இறைவனின் ஆலயங்கள், திருக்கயிலையும் தில்லை அம்பலமும், கோபுர வாயில்கள், உடம்பில் உள்ள இருவகை சக்திகள், ஒழிபியல், மரபியல், வரைபடங்கள் என 188 பக்கங்களுக்குள் ஒரு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் விஞ்ஞான, மெய்ஞ்ஞான,சித்தாந்த, வேதாந்த அடிப்படையில் விளக்கிக் கூறியுள்ளார் சைவ சித்தாந்த ஞான தேசிகரான அ.சொ.சுப்பையா. நம் உடம்பில் உள்ள உத்தமனை அறிந்துகொள்ளவும், அவ்வுத்தமன் குடிகொண்டுள்ள உடம்பைப் பற்றி அறிவியல் ரீதியாகத் தெளிவாக அறிந்துகொள்ளவும், அதைப் பேணும் வழிவகைகளையும் இந்நூலைப் படித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். மிகச்சிறந்த அனுபவ, அறிவுப் பொக்கிஷம். நன்றி: தினமணி, 6/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *