நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ.

தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு ஜமீனின் சிறப்பம்சமான சிலம்பு வரிசையில் வஸ்தாரி கப்புத்தேவர் சரிசை, ஆளைக் கொல்லும் வஸ்தாரி ஐயங்கார் வரிசை, ஊத்துமலை ஜமீன் அரண்மைனையைக் குளிரூட்டுவதற்காக வெட்டப்பட்ட கால்வாய், எட்டையபுரம் மன்னர் பரம்பரையைத் தோற்றுவித்த நல்லம நாயக்கருக்கு எட்டப்பன் என்ற பெயர் வரக்காரணம், சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரிய சாமித் தேவர் நண்பனைக் காப்பாற்றுவதற்காக செய்த கொலைக்காக பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டு தூக்குத்தேவர் ஆன வரலாறு, இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முறையாகப் போரைத் தொடங்கிய நெற்கட்டும் செவ்வல் குறுநில மன்னர் பூலித்தேவன் என பல சுவாரஸ்யங்கள் இந்த நூலை கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கின்றன. அத்துடன் நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் சீறாப்புராணம் அரங்கேறிய சம்பவம், வீர பாண்டிய கட்டபொம்மன் மிகச் சிறந்த முருக பக்தனாகவும் விளங்கியதை விளக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம், தமிழ்ப் புலவர்களை ஆதரித்த ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பருக்கும் காவடிச்சிந்து பாடிய அருணாசலக் கவிராயருக்கும் உள்ள நட்பின் நெருக்கம் என மேலும் பல சுவையான தகவல்களையும் கூறுகின்ற இந்நூல், பல்வேறு திரைப்படங்களுக்கான கருவைச் சுமந்துள்ளது என்றால் அது மிகையல்ல. நன்றி: தினமணி, 30/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *