பச்சை விரல் பதிவு

பச்சை விரல் பதிவு, வில்சன் ஐசக், தமிழில் எஸ். ராமன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில், பக். 144, விலை 120ரூ.

கேரள மாநிலத்தில் பிறந்தபோதிலும் இந்தியாவில் துயரம் நேர்ந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று தொண்டு செய்த பெண்மணி தயாபாய் (மேர்சி மாத்யூ) பற்றிய நூல். சுயசரிதை என்றாலும் அவரது களப்பணிகளின் பதிவுகள் மட்டுமே இடம்பெறுகிறது. பிகாரில் கோண்டு பழங்குடியினரிடையே சுமார் 14 ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வாழ்வின் மேம்பாட்டுக்காக சேவை புரிந்திருக்கிறார். அதிகார வர்க்கத்தின் மெத்தனப்போக்கு, ஆதிவாசிகளின் அறியாமை இரண்டுக்கும் பாலமாக இருப்பதைப் போன்ற சிரமம் வேறு ஏதும் இருக்க முடியாது. விரைவில் சலிப்படையச் செய்யும் சூழல் உருவாகும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும் தொடர்ந்து அவர்களுக்காகப் போராடிய அவரது களப்பணி, தற்போது இந்தியாவில் தொண்டு நிறுவனங்களைத் தொடங்கி நடத்த அல்லது அதில் பங்கேற்க விழையும் அனைவரும் அறியவேண்டிய ஒன்று. அவருக்குக் கிடைத்த விருதுகள் பற்றிய பட்டியல் ஏதும் தரப்படவில்லை. ஆனால் அவரது உறவினர் அந்தப் பெண்மணி குறித்து சொன்னதுதான் அவரது வாழ்க்கைக்குக் கிடைத்த விருது. அந்த உறவினர் சொன்னாராம் – முன்பு அவளைப் பார்த்தபோது அயல்நாட்டுக்காரிபோல இருந்தாள். இப்போது புலையப் பெண்ணைவிட மோசமாக இருக்கிறாள். அந்த அளவுக்கு தன்னை பழங்குடியின மக்களுடன் இணைத்துக்கொண்டவர் இவர். நன்றி: தினமணி, 11/8/2014.  

—-

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 80ரூ.

இந்திய அரசியல் சட்டம் பற்றிய அருமையான புத்தகம் இது. குடியரசு தலைவரின் அதிகாரங்கள், நெருக்கடி நிலையை எப்போது பிரகடனம் செய்யலாம், கவர்னர்களின் அதிகாரங்கள், சட்டமன்றங்களுக்கான உரிமைகள் இப்படி சகலவிதமான தகவல்களையும் இந்நூல் தருகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய நடையில் சட்ட நுணுக்கங்களை விளக்கியுள்ளார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாச்சலம். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *