பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ.

இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது உணர்வுபூர்வமான அன்பு ஏற்பட்டு அவளுடன் கலந்து பின்னர் ஒரு கட்டத்தில் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி, மிகப்பெரிய யோகா குரு ஆகி தன் பயணத்தின் இலக்கைக் கண்டடைகிறான். நாவல் முழுக்க எளிமையான நடையில் ஆசிரம பணிகள், இந்துத்துவ அரசியல், சகமனிதர்களுடனான உறவுச்சிக்கல்கள் சுவாரசியமாக விவரிக்கப்படுகின்றன. எவ்வளவுதான் தீவிரமான பணியாளனாக இருந்து ஒவ்வொரு இடத்திலும் அவன் வெற்றி பெற்றாலும் குறுகுறுவென ஒரு குற்ற உணர்வு அவனுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அவனுடன் இருக்கும் சக ஆசிரம வாழ்வில் பிரச்னை ஏற்படும்போது சலிப்புற்றுக் கிளம்பிச் சென்று, அயோத்திக்கும் அதன் பின்னர் காசிக்கும் சென்று அங்கே ஒரு ஹடயோகியுடன் பழகி வாழ்வின் இன்னொரு பக்கத்தைப் புரிந்துகொள்ளும் இடம் முக்கியமானது. நாவல் பல்வேறு தளங்களில் இருந்து அணுகும் அளவுக்கு சமகால வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது. நன்றி: அந்திமழை, 1/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *