பால்ய வீதி

பால்ய வீதி, தெ.சு.கவுதமன், கவி ஆதவன் புத்தகக்கருவூலம், சென்னை, பக். 80, விலை 80ரூ.

அன்றாட வாழ்வின் அனுபவத்திலிருந்து வாழ்வின் அர்த்தத்தை தன் கவிதைகள் வழி தேடுகிறார் கவுதமன். அப்படிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பால்யவீதி. இச்சமூகத்தின் மேல் காட்டும் கோபம் ஆத்திரம் ஆதங்கம் சோகம் எல்லாமே, இச்சமூக மாற்றத்திற்கான ஒரு பாங்காக்கிக்காட்ட முயல்கிறார். ஏதோ பொழுதுபோக்குக்காக கவிதை எழுதாமல், அடக்கமுடியாமல் போன அந்த முதல் மனிதன் அடங்கியிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடும் பல மூத்திரச் சந்துகள் என்று சமூகத்திற்கான மாற்றம் வேண்டிய எண்ணப்பதிவுகளாக நம் மனதிற்குள் உட்கார்ந்து சிந்திக்க வைக்கிறார். நன்றி: குமுதம், 13/8/2014.  

—-

புவியின் நிழலில், நாம்தேவ் நிம்கடே, தமிழில் எம்.எஸ்., காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 352, விலை 280ரூ.

மராட்டிய மாநிலம் சந்த்பூர் மாவட்டத்தில் சாத்காவ் என்கிற குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து சமூக சேவகராகவும், வேளாண் விஞ்ஞானியாகவும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இருந்த நாம் தேவ் நிம்கடேவின் சுயசரிதை நூல் இது. நிம்கடே, தீண்டாமைக் கொடுகைகளால் அனுபவித்தத துயர்களைப் படிக்குபோது நமக்குத் தீண்டாமையின் மீது அடக்க முடியாத கோபம் வருகிறது. பள்ளிக்கூட ஜன்னல் வழியாகப் பாடங்களைக் கேட்டு, உயர்சாதி மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றதாக சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் உயர்சாதி மாணவர்கள் அவரை அடித்து உதைத்ததைப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன. மாணவப் பருவத்திலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காகப் பாடுபட முடிவு செய்ததும், ஊர்ப் பொதுக்கிணற்றில் நீர் எடுக்கப் போராடி வென்றதும், தாழ்த்தப்பட்டோர் வாழும் இடத்தில் கொட்டப்படும் மனிதக் கழிவுகளை அகற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கொட்டச் செய்ய நடவடிக்கை எடுத்தும் என வாழ்வில் சவால்களாக இருந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நிம்கடே. அம்பேத்கருடன் சிலநாட்கள், மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) குடன் அமெரிக்காவில் சந்திப்பு என பல சரித்திர நாயகர்களின் வரலாற்றுப் பக்கங்களில் நிம்கடே இடம் பெற்றிருக்கும் சம்பவங்கள் அழகுறப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நூலாசிரியர் பல இடங்களில் தனது நகைச்சுவை ஆற்றலையும் தூவி விட்டு ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார். நன்றி: தினமணி, 8/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *