மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் பண்டைத் தமிழக வரலாறு, சேரர் – சோழர்- பாண்டியர், (20 தொகுதிகள்), பதிப்பு வீ. அரசு, தமிழ்மண் பதிப்பகம், விலை 5495ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024249.html ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அந்த இன வரலாற்றை தொல்லியல், கல்வெட்டு, பண்பாட்டு அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிக் குவித்த ஒரு சில ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900 – 1980). பத்திரிகை ஆசிரியராக வாழ்க்கையைக் கடத்தி, மயிலை சீனி எழுதி முடித்த புத்தகங்கள்தான் தமிழன் தன்னுடைய பழம்பெருமையை உணர, உண்மையான புதையலாக அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைந்தது. அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் மறுபதிப்பு செய்துள்ளார் பேராசிரியர் வீ. அரசு. தமிழ்நாட்டு வரலாறு, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்குநாட்டு வரலாறு ஆகிய வரலாற்று நூற்களும் தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகிய கலைநூற்களும் தமிழனின் கடந்த காலத்தை மீட்டெடுப்பவை. அனைத்து சமயங்களையும் உள்வாங்கிகொண்ட மொழியாகத் தமிழ் எவ்வாறு இருந்தது என்பதை விளக்குகிறது. கிறித்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், சமயங்கள் வளர்த்த தமிழ் ஆகிய நூற்கள். மயிலை சீனியின் மிக மிக முக்கியமான புத்தகம், ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’. தமிழைத் திருமணம் செய்துகொண்டதால் தனித்திருமணம் செய்துகொள்ளவில்லை அவர். தனது உறவினர் கூட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் இறந்துபோன சோகத்தில் இருந்தார் மயிலை சீனி. அப்போது அவர் படித்த புத்தகம் யாப்பருங்கல விருத்தி. அதன் உரையாசிரியர் ஏராளமான புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறார். ஆனால் எதுவும் இப்போது இல்லையே என்ற ஏக்கம், அந்தக் குழந்தைகளை இழந்ததைவிட மயிலை சீனிக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதில் குறிப்பிடப்படும் புத்தகங்களை தேடத் தொடங்குகிறார். மொத்தம் 333 புத்தகங்களை தனது புத்தகத்தில் பட்டியலிட்டு தமிழர்களுக்கு மலைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இதேபோல்தான் தமிழகக் கலை வரலாறு படிக்கும்போதும் பழந்தமிழர் கலை உன்னதங்கள் வெளிப்படும். தற்காலத்துத் தமிழ்ச் சமூகம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்துவிட்டது. தன் பெருமை தான் அறியா சமூகமாக இருந்துவருகிறது. கலை, கலை என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகளைப் பற்றியே. இலக்கியக் கலைகூட அதிகமாகப் பேசப்படுவது இல்லை. ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர். இந்தக் காலத்து தமிழர், மறக்கப்பட்ட அழகுக் கலைகள் மறைந்துகொண்டே இருக்கின்றன என்று வருந்தினார் மயிலை சீனி. அவரது புத்தகங்கள் மீண்டும் வந்து இருக்கும் காலகட்டத்தில் அந்த ஏக்கம் தீர்க்க பலரும் முன்வரலாம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 07/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *