அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணி மைந்தன், தி கேன்சர் இன்ஸ்டிடியூட், பக். 288, விலை 150ரூ.

திசை நோக்கி தொழுவோம்! அடையாற்றின் அடையாளங்கள், ஆலமரம், அன்னி பெசன்ட் அம்மையார், அடையாறுகேன்சர் இன்ஸ்டிடியூட். இவற்றுள் இன்றும் தன்னை உலகெங்கும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் கேன்சர் இன்ஸ்டிட்யூட் எனும் விருட்சத்திற்கு வித்திட்டவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். அவர் கண்ட கனவுதான், கருமவினை என ஒதுக்கித் தள்ளப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்த, தனி மருத்துவமனை வேண்டும் எனும் லட்சியம். அந்த லட்சியம் ஈடேற, உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியபோதும், உள்நாட்டு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் காட்டிய அலட்சியம், ஏற்படுத்தியத் தடைக் கற்கள், சந்தித்த அவமானங்கள் இத்தனையும் தாண்டி, அந்த மருத்துவமனையில், நோய் – நோயாளிகள் என்ற ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தாயன்போடு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், இந்தியாவிலேயே புற்றுநோய்க்கு உலகத்தரம் வாய்ந்த உன்னதமான சிகிச்சை என்பனவற்றை எல்லாம் விளக்கும் வரலாற்றுப் பெட்டகம் இந்த நூல். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பயணித்த அதே பாதையில், அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் பயணித்தார். அதே போராட்டங்கள், முயற்சிகள், அவமானங்கள். டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் புனிதப் பணிக்கு மேலும் உரமூட்ட, டாக்டர் சாந்தா துணை நின்றார். இவர்களின் அளப்பரிய முயற்சியாலும், தன்னலமற்ற தொண்டுக்குக் கிடைத்த பரிசாகவும், புற்றுநோயாளிகளுக்குதேவையான கோபால்ட் 60 எனும் சக்தி வாய்ந்த கருவி, இந்தியாவிலேயே முதன் முதலாக, லீனியர் ஆக்சிலரேட்டர் எனும் கருவி ஆகியவை, வெளிநாட்டில் இருந்து தருவித்து நிறுவப்பட்டன. கோபால்ட் 60 எனும் விலை உயர்ந்த கருவிகளின் பாகங்களை, உள்நாட்டிலேயே விலை மலிவாக தயாரிக்கும் முயற்சியில், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அணுசக்தி துறையைச் சேர்ந்த டாக்டர் ஏ.எஸ்.ராவ், பேரா. பாபா ஆகியோர் உதவியோடு ஈடுபட்டார். இப்புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் முதன் முதலாக வந்த நோயாளி முதல், இன்று வரும் நோயாளி வரை அனைவரது நோய்க்கும் அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்கள் அனைத்தும், விரல் நுனியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ளோரின் தொண்டின் தூய்மையை உணர்ந்தே பணிநிறைவேற்றோர் பலர் ஊதியமில்லா ஊழியராய் ஊழியம் செய்கின்றனர் என்றால், இதன் மகோன்னதத்தை உணரலாம். நூலில் அணிந்துரையில் சுகி. சிவம் சொல்வதுபோல் நாமும், திசை நோக்கி தொழுவோம்!. -புலவர். மதியழகன். நன்றி: தினமலர், 16/8/2015.

Leave a Reply

Your email address will not be published.