அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை 80, பக்கங்கள் 1848, விலை 1500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-6.html

அருள்மிகு கருப்பசாமி, தமிழ்நாட்டின் புகழ்மிக்க காவல்தெய்வம் என்பதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய குல தெய்வமாகவும் திகழ்வது உண்மை. நாடெங்கிலும் உள்ள கருப்பனார் கோவில்கள் பற்றிய விவரங்களையும், வழிபாட்டுச் சிறப்புகளையும் மந்திர, தந்திர, யந்திரங்களோடு எண்ணற்ற துதிப்பாடல்களையும், புராண வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கர்ண பரம்பரைச் செய்திகளையும், ஒரு சேரத் தொகுத்தளிக்கும் பிரம்மாண்டமான நூல் இது. பழங்கால முறைப்படி சிக்குப் பலகையில் தூக்கி வைத்தே படிக்க இயலும். இந்த நூலே கருப்பணசாமிக்கு எழுப்பப்பட்ட ஒரு புனிதகோவில் என்னுமளவுக்கு ஏராளமான வண்ணப்படங்கள் உள்ளன. சந்தோஷம் என்னும் மந்திரச் சொல்லை சதா சர்வ காலமும் உச்சரித்து உலக மக்களை வாழ்த்திக் கொண்டிருக்கும் தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவே இந்த நூலை எழுதித் தொகுத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. அழகர் கோவிலில் உள்ள 18ஆம் படி கருப்பசாமியின் வரலாறு, கருப்பசாமி கொள்ளையர்களிடமிருந்து பக்தர்களை காத்தது, கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறி, விருத்தாசலம் அருகே பக்தர்களைச் சிறைமீட்டு நீதியை நிலைநாட்டியது, பரிசோதிக்க முயன்ற வெள்ளையருக்குப் பாடம் கற்பித்தது போன்ற பல செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகம், புதுவை, கேரளம் மட்டுமல்லாது, திருப்பதி, அந்தமான், மலேசியா போன்ற இடங்களில் கருப்பசாமி கோவில் மகிமைகளும் இடம்பெற்றுள்ளன. கருப்பசாமிக்களஞ்சியம் என்றே புகழத்தக்க இந்த நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருப்பது சிறப்பு எனலாம். – கவுதமநீலாம்பரன்.  

—-

 

திருமால் அடியார் பாத யாத்திரை, உ.வே.குமாரவாடி சே. ராமானுஜாசார்யர், திருமால் பதிப்பகம், 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக்கங்கள் 234, விலை 120ரூ.

ஆன்மிக பயணம் உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதி தரும் என்றும், பயணத்தின்போது ஏற்படும் அனுபவங்கள் மனதை செம்மைப்படுத்தவும் செய்யும் என்றும், இந்நூல் வாயிலாக அனைவரும் உணரலாம். இந்நூலாசிரியர் சிறந்த தேச பக்தியும், தெய்வ பக்தியும் உடையவராக விளங்குவதால்,இந்நூலில் அவர் கூறியுள்ள செய்திகளும் அதற்கேற்ப உள்ளன. 108 திவ்ய தேசங்களில் எண்பதிற்கும் மேலாக தமிழகத்தில் உள்ளன. அவற்றையெல்லாம் பாத யாத்திரையாக சென்று சேவித்த இந்நூலாசிரியரின் அனுபவமே மிகச்சிறந்த நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் எளிய தமிழ்நடை, அனைவருக்கும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். – டாக்டர கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 05 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published.