அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ.

மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் கேள்விக்குள்ளாக்குகிறார். பூர்வ காலத்தில் மதுவைத் தொடாமல் இருந்த பௌத்தர்கள் தான் அ-சுரர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும், அந்த பூர்வ பௌத்தர்களே இன்றுள்ள தலித் மக்கள் என்றும் அயோத்திதாசரின் வாதத்தை இந்தக் கட்டுரைகளில் துணை கொள்கிறார் ரவிக்குமார். அந்த அ-சுரர்கள்தான் காலப்போக்கில் மனிதத்தன்மை அற்றவர்களாக, கொடூரமானவர்களாக வைதீகத்தால் மாற்றப்பட்டனர் என்கிறார் அவர். கள் விற்கும் கடைகள் சேரிகளுக்குப் பக்கத்தில் இருப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார். தலித் மக்களின் விடுதலை அரசியலுக்கும் மதுப்பழக்கம் எவ்வளவு பாதகமாகும். குடிப்பழக்கம் ஒரு தலித்தை உரிமை எதையும் கோர விடாது என்பதையும் சொல்கிறார். போதை சாதனங்கள் காலம் காலமாக ஒரு சமூகத்தில் ஏன் ஒரு அங்கமாக இருக்கின்றன? நவீனச் சூழலில் மதுபானங்கள் ஏன் அதிகம் மக்களால் நாடப்படுகின்றன என்ற கேள்வியையும் ஆசிரியர் பரிசீலித்திருக்கலாம். எல்லோரும் படிக்க வேண்டிய அவசியமான சிறுநூல். -வினு பவித்ரா. நன்றி: தி இந்து, 20/12/2014.  

—-

தமிழ்த்திரை உலகம் ஆயிரம் செய்திகள், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.

திரை உலகில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர் பட அதிபர் டைரக்டர் முக்தா சீனிவாசன். இவர் இயக்கிய முதல்படமான முதலாளி (எஸ்.எஸ்.ராஜேந்திரன் – தேவிகா நடித்தது), பெரிய நடிகர்கள் நடித்த படங்களை முறியடித்து, வெற்றிவாகை சூடியது. தமிழ்த்திரை உலகம் பற்றிய 1000 தகவல்களை ரசிகர்களுக்கு நூல்கள் வாயிலாக வெளிப்படுத்த திட்டமிட்ட முக்தா சீனிவாசன், இப்போது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதில் 225 தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றில் உள்ள பல செய்திகள், ரசிகர்கள் இதுவரை அறிந்திராதவை. சிறிய புத்தகம் ஆயினும், சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/12/2014.

Leave a Reply

Your email address will not be published.