உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5.

சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் உரை வடிவம் என்றாலும்கூட புலவர் தனக்கே உரிய மொழித் திறன்களை எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். அரபு, பாரசீக அருஞ்சொல் அகராதி, சொற்றொடரின் விளக்க அகராதி, சிறப்புப் பெயர் விளக்க அகராதி, பழமொழி அகராதி ஆகியவற்றைப் பின் இணைப்பாகத் தொகுத்துள்ளனர். இவை வாசிப்புத் தடைகளை நீக்குகின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்று சீறாப்புராணமும் கதாகாலட்சேபமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதரமும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. வசன காவியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தமிழுல் வெளிவந்த முதல் நூல் இதுதான். கல்தச்சன் பதிப்பகம் இந்நூலைச் சிறப்பாகத் தயாரித்திருக்கிறது. -மு. அப்துல் ரசாக். நன்றி: தமிழ் இந்து, 13/10/13.  

 

தொட்டனைத்தூறும் தொல்காப்பியம், ரா. கலியபெருமாள், அய்யா நிலையம், 1603, ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, உ.ஆ. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 240, விலை 175ரூ.

இலக்கணத்தை எல்லோராலும் அவ்வளவு எளிதாகக் கற்க முடியாது. அதற்கு தீவிர முயற்சியும், ஆர்வமும் தேவை. இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தைப் பற்றிய உரைகள் அதிகமில்லாத நிலையில், இந்நூலாசிரியர் அவ்வதிகாரத்தின் இரு இயல்கள் குறித்து தமது கோணத்தில் ஆராய்ந்திருப்பது புதிய முயற்சி, அதுமட்டுமல்ல, தொல்காப்பியச் சூத்திரங்களை எந்தெந்த உரையாசிரியர் எப்படி விளக்குகிறார்? அதில் தனது கருத்த என்ன? என்பதை ஆசிரியர் வரிசைப்படுத்தியிலிருப்பது வாசிப்போர் எளிதாகக் கருத்தகளை எடுத்துக் கொள்ள ஏதுவாகவுள்ளது. நூலின் அணிந்துரையில் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி குறிப்பிடுவதைப் போல, இன்றைய இளம் தலைமுறை தமிழின் மரபு வழிக் கல்வியை மறந்துவிட்ட நிலையில், இது போன்ற தொல்காப்பிய உரை குறித்த நூல்கள் தமிழைப் புத்துணர்வூட்டி, அடுத்த தலைமுறைக்கு இலக்கண அறிவை எடுத்துச் செல்லும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இனிவரும் இளந்தலைமுறை தமிழாசிரியர்கள் இலக்கணச் சோலைக்கான வழிகாட்டும் பலகை போலவே இந்நூல் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. நன்றி: தினமணி, 25/11/13.

Leave a Reply

Your email address will not be published.