ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ.

பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆபிதா பர்வீன் என்ற முதல் சிறுகதையில், ஒரு நடுத்தர ஹிந்துக் குடும்பத்திலுள்ள திருமணமாகாத மூன்று பெண்களுக்கு, ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மூலம் எப்படி வாழ்க்கைத் துணைகள் கிடைக்கின்றன என்பதை விவரிக்கிறது. அது உள்ளத்தைத் தொடும்படி உள்ளது. ஜெய்ப்பூர் ராணி என்ற கதையில் டாக்டருக்குப் படித்த தன் மகளுக்கு, தனது இஸ்லாமிய மதத்தில் டாக்டருக்குப் படித்த மணமகனைத் தேடுத் தந்தையின் அனுபவங்களும், முடிவும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. நிக்காஹ்களும் குலாக்களும் என்ற சிறுகதை, முஸ்லிம் பெண்களுக்கு விவாக விலக்கு உரிமையை விரிவாக பேசுகிறது. இந்நூலிலுள்ள கதைகளுக்கான கருக்கள் பெரும்பாலும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை என்று ஆசிரியர் கூறுவதால், அந்தக் கதாபாத்திரங்களோடு ஒன்றிணைந்து விடும் உணர்வை ஏற்படுத்துகிறது. -பரக்கத். நன்றி : துக்ளக், 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published.