கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், அ. முத்துலிங்கம், விகடன் பிரசுரம், பக். 270, விலை 155ரூ.

கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் அவநம்பிக்கை மனிதர்களில் எத்தனை வகைப்பாடு உண்டோ பயணங்களிலும் அப்படியே. அதிலும் சில முத்திரைப் பயணங்கள், முன்னுரிமை பெறுகின்றன. செங்கடலைக் கடந்த மோசஸின் பயணம், பழைய ஏற்பாட்டில் படிக்கக் கிடைக்கிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு யாத்ரீகராக வந்த பாஹியான் பற்றிய விவரங்களும் பரவலாக அறியப்பட்டுள்ளன. ஐரோப்பிய மாலுமி கொலம்பஸ், இந்தியாவுக்குப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுஅமெரிக்காவோடு நின்றுவிட்டார். இப்படி எத்தனையோ பயணங்கள். வீரமான பயணங்கள், காளிதாசனின் எழுத்தில் சிருங்காரமான பயணங்கள் போன்றவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சோகம் நிரம்பியிருப்பது அகதிகளின் பயணத்தில்தான். அகதிகள் பயணிக்கும்போது தங்கள் மூட்டை முடிச்சுகளோடு, துயரத்தையும், அச்சத்தையும், அவநம்பிக்கையையும் சுமந்தபடியே பயணிக்கின்றனர். எதிர்பார்ப்புகளும், அதைவிட ஏமாற்றங்களும் நிறைந்த அகதிகளின் பயணக் கதையை அங்கங்கே சுவாரசியம் சேர்த்து ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார், அ. முத்துலிங்கம். அகதிகள் இருக்கும் வரை இந்தப் புத்தகம் பேசப்படும். முத்துலிங்கத்தின் கதாநாயகன் நிஷாந்த். இவனுடைய பயணம் யாழ்ப்பணத்தில் துவங்கி, கனடாவின் ரொறொன் ரோவில் முடிகிறது. ஆபத்துகள் நிறைந்த பயணத்துக்கு இடையே இவன் காதலிக்கிறான். காதலியின் பெயர் அகல்யா. இனி அ. முத்துலிங்கம் அன்று காலையில் எல்லாமே நல்லாய்ப் போயிற்று. கொஞ்சம் மழை பெய்து தண்ணீர் திட்டுத் திட்டாகத் தேங்கியிருந்தது. சூரியன் மறைவதற்குக் காத்திருந்ததுபோல, இரவு திடீரென்று வந்து இறங்கியது. இருவரும் வெளியே நின்றனர். ஆகாயத்தைப் பார்த்த பின்னர் நிலத்தைப் பார்த்தபோது, அந்தக் காட்சி விவரிக்க முடியாத அழகோடு வெளிப்பட்டது. ஆகாயத்து நட்சத்திரக் கூட்டம், தண்ணீரில் பளீரென்று தெரிந்தது. அவற்றைக் கையால் தொட்டு விடலாம் போல் இருந்தது. அத்தனைத் துல்லியம். அதன் நடுவே நின்று அவளுக்குக் கைகடிகாரப் பரிசைத்தந்தான். அவளால் பொறுக்க முடியவில்லை. அவன் தலையை அவசரமாகப் பிடித்து இழுத்து முத்தம் தந்தாள். (பக். 98,99). இதே அகல்யா இன்னொரு கட்டத்தில் நிஷாந்த் போலீசிடம் மாட்டிக்கொள்ளும்போது இவனை அறியாதவள் மாதிரி இருந்துவிடுகிறாள் என்று எழுதுகிறார் அ. முத்துலிங்கம். -சுப்பு. நன்றி: தினமலர், 27/9/2015.

Leave a Reply

Your email address will not be published.