கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ.

தமிழ்த் திரை இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில், காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு நூல். காலத்தை வென்ற அப்பாடல்களுக்கு முன்னுரையுடன் விளக்கம், பாடல் எழுந்த சூழ்நிலை, கதையின் கருத்தமைவு, காட்சிகளின் தனித்துவம், பண்பாட்டுப் பெருமை, தத்துவம், ஆன்மிகம், உறவுகள், சோகம் ஆகியவற்றினுள்ளே பொதிந்துகிடக்கும் செய்திகளை புதையலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் காவிரிமைந்தன். அவர் காட்டும் பாடல்கள் அனேகமாக நமக்குத் தெரிந்தவை. ஆனால் அதில் நாம் அறிந்திடாத செய்திகள் இவ்வளவு இருக்கிறதா என வியக்க வைக்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.  

—-

கி.பி. 1800ல் கொங்குநாடு, அனுராதா பதிப்பகம், சேலம் மாவட்டம், விலை 190ரூ.

200 ஆண்டுகளுக்கு முன்பு கொங்குநாடு இருந்த நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். டாக்டர் பிரான்சிஸ் புக்கானன், அலெக்சாண்டர் ரீடு போன்றோர் கி.பி.1800ல் எழுதியுள்ள கொங்குநாடு பற்றிய குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டும், வேறு பல நூல்களை ஆராய்ந்தும் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளின் இயற்கை வளம், மக்கள் தொகை, விளைபொருட்கள், விலைவாசி, விவசாயம், தொழில், நீர்ப்பாசனம், மக்களின் பழக்க வழக்கங்கள், சாதிய அமைப்பு முறை, மண் வளம், கால்நடைகள் போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த கால வரலாற்றைப் படித்துத்தான் எதிர்கால வரலாற்றைப் படைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கொங்கு நாட்டின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் புலவர் செ. இராசும், இடைப்பாடி அமுதனும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.

Leave a Reply

Your email address will not be published.