க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பு-சா. கந்தசாமி, சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ.

பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, க.நா.சு.வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா. கந்தசாமி, க.நா.சு.வின் 24 சறுகதைகளைத் தொகுத்து, இந்த நூலை தயாரித்திருக்கிறார். க.நா.சு.வின் நூற்றாண்டை ஒட்டி சாகித்ய அகடமி வெளியிட்டுள்ள, இந்த சிறு கதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய அன்பர்களால் நிச்சயம் வரவேற்கப்படும் என்று நம்பலாம். -ஜனகன். நன்றி; தினமலர், 23/6/2013.  

—-

 

முத்தில் முகிழ்ந்த முத்தரையர், நடன. காசிநாதன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 178, விலை 120ரூ.

முத்தரையர் என்ற சொல்லை, முத்து+அரையர் என்று பிரிப்பதே பொருத்தமானது என்று, வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவும் நூலாசிரியர், நாடாண்ட முத்தரையர் வரலாற்றைச் சுருக்கமாக விளக்கி, வன்னி முத்தரசர் செப்புப் பட்டயம், பழனித் தலவரலாற்றையும் எடுத்தாண்டுள்ளார். முத்தரையர் பற்றிய கல்வெட்டு, நாலடியார் பாடல்கள், கோவை, பதிகம், செப்புப்பட்டயம் போன்றவற்றையும் ஆய்வு செய்து அதன் ஒளி நகல்களையும் ஆங்காங்கே இணைத்திருப்பது தக்கச் சான்றுகளாய் உள்ளது. முத்தரையர் பற்றிய வரலாற்றை அறிய உதவும் ஆய்வு நூல். -பின்னலூரான். நன்றி; தினமலர், 23/6/2013.  

—-

 

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-148-9.html

சமூக சிந்தனை, பொது ஒழுக்கம், தனி மனித வாழ்வியல் நெறி, அரசியல் போன்ற துறைகளில் பெரும்பாலும் வேத நெறிகள் எவ்வாறு மையக்கருத்தாய் வைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளன என்பதை, ஐந்து பெரும் கட்டுரைகளில் வடிவமைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். ஆழ்ந்த வாசிப்பிற்கும், சிந்தனைக்கும் உரியது இந்த நூல். நன்றி; தினமலர், 23/6/2013.

Leave a Reply

Your email address will not be published.