சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ.

தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை செய்தி, விவேகானந்தரின் கருத்தியலை (பக். 42) விவரிக்கிறார். இரண்டாவது இயல்,  தலித் சமுதாயத்தின் கட்டுமானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. தீண்டாமை நடைமுறையில் ஒழிக்கப்படவில்லை என்ற கருத்தைத் தெரிவிக்கிறது (பக். 69). மூன்றாவது இயல், கிறிஸ்தவ மதப் பின்னணியில் ஒடுக்கப்பட்டோருக்கான சமூக விடுதலையையும், திருச்சபைகளின் செயற்பாட்டில் உள்ள சில இயல்புகளையும் மறுவிளக்கம் செய்வதாய் உள்ளது. நான்காவது இயலில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக இடம்பெற்றிருப்பதோடு, அவரது சிந்தனைகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. அனைத்து மதங்களின், தலங்களின் சிறு வரலாற்றையும், அத்தலங்களால் எழுந்த புத்தெழுச்சி பற்றிய கருத்துக்களையும் எடுத்துக் கூறுவதாய், ஐந்தாம் இயல் அமைந்துள்ளது. இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, மறுவிளக்கம் தரும் முயற்சிகளை, அனைத்துச் சமயங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துகளை ஆசிரியர் முன்வைக்கிறார் (பக். 203). பிற சமயங்களுடனான ஒத்துழைப்புப் பற்றிய புரிதலில், கிறிஸ்தவ மதத்தின் இணைவு பற்றிய சிந்தனையை, இறுதி இயல் தெரிவிக்கிறது. சமயப் பொதுமைக்கான சில சிந்தனைகளைக் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் ஆசிரியர் சிந்தித்துள்ளார். இந்து மதத்தைப் பற்றிய புதிய புரிதலை வேண்டுவோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கான சமூக விடுதலையைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் இந்நூல் பயன்படும். -இராம. குருநாதன். நன்றி: தினமலர்,18/10/15.

Leave a Reply

Your email address will not be published.