தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ.

மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் கல்வி முறை சரியானதுதானா? என்பதைப் புரிய வைக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்த காலகட்டத்தில், சி.சி.இ.இன் அடிப்படைகளையும் அதன் பலன்களையும் விளக்கி இந்நூல் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சி.சி.இ. என்றால் என்ன? என்பதில் தொடங்கி, அது ஏன் தேவை, அந்தக் கல்வியில் இருந்து மதிப்பீடு வரையிலுமான பல்வேறு விவரங்கள், மாணவரின் மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது குறித்து ஆசிரியர்களுக்கான எளிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சுவைபட விளக்குகிறார். மாணவர்களின் சிறிய வெளிப்பாடுகளையும் கூர்ந்து நோக்குவதன் மூலம் அவர்களின் உள்ளார்ந்த பண்புகளையும், உணர்ச்சிகளையும் எடைபோட முடியும் என்கிறார் நூலாசிரியர். நூல் முழுவதிலும் இடம்பெற்றுள்ள ஆங்கில வார்த்தைகள் வாசிப்பதில் தடையை ஏற்படுத்துவதாக உள்ளன. சி.சி.இ. குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கும் இந்த நூல் குழந்தை மனங்களைக் கையாளுதல் என்ற அவசியமான பணியில் ஈடுபட்டுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நன்றி: தினமணி, 13/1/2014.  

—-

  நாட்டைப் பிடித்த நாடோடி, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ.

ஆங்கிலேய அரசு, இந்தியாவில் கால் பதிக்க முக்கிய காரணியாக இருந்த ராபர்ட் கிளைவ், ஆரம்ப காலத்தில் ஊதாரியாக, நாடோடியாக திரிந்து, பின்னர் இந்திய நாட்டைப் பிடித்த சுவாரசியமான தகவல்கள் வியக்க வைக்கின்றன. அலங்காரமும் அனுமானமும் இல்லாமல் வரலாறை உள்ளபடி பதிவு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

Leave a Reply

Your email address will not be published.