நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18.

இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் பிரீத்பாலின் நண்பன் பாரதியின் வருகைக்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்குகிறது. மண், பொன், பெண் பேராசைப் பிடித்த டாகூர் சிங்கின் நடவடிக்கைகளை வெறுக்கும் மகன் பிரீத்பால், தனது கல்லூரி நண்பன் பாரதியுடன் இணைந்து முதலாளித்துவ மனோபாவம் கொண்ட தந்தையைத் திருத்துகிறார். முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலை விளக்கும் இடதுசாரி சித்தாந்த நோக்குடன் எழுதப்பட்ட இந்தியாவின் முக்கியமான சமூக சீர்திருத்த நாவல்களில் இதுவும் ஒன்று. இந்நாவலின் மொழிபெயர்ப்பு மிக எளிமை. விடுதலைப் போராட்ட கால நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை, சோசலிச இயக்கங்களின் செயல்பாடு ஆகியவற்றைச் சித்திரிக்கும் இந்நாவல், இந்திய மொழிகளின் நவீன இலக்கியம் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய ஒன்று. நன்றி: தினமணி, 24/6/13.  

—-

 

பாலைவன சிங்கம் உமர் முக்தார், ஏ.எம்.யூசுப், புதுயுகம், 26, பேரக்ஸ் ரோடு, பெரியமேடு, சென்னை 3, விலை 150ரூ.

இயற்கையில் உமர் முக்தார் மதரஸாவில் குர்ஆனை போதிக்கும் ஆசான். ஆனால், யுத்த களத்தில் மிகச்சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்டவர். போர் தந்திரம் மற்றும் தாக்குதலின் மூலம் பல நேரங்களில் இத்தாலிய படையை நிலைகுலைய செய்திருக்கிறார். 20 வருடங்களாக இத்தாலிக்கு எதிராக உமர் முக்தார் மேற்கொண்ட கொலில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய கால அரசியலையும் மையமாகக் கொண்டு நாவல் வடிவில் இப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது. அன்று உலகின் மிகவும் பலம் பொருந்திய சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி, உமர் முக்தாரின் பாலைவன போர் தந்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் திணறி போனார் என்பது வரலாறு. உமர் முக்தாரின் லிபிய போராட்ட வரலாறு நடந்து முடிந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், நம் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்ற விதத்தில் இந்நாவலை விறுவிறுப்புடன் படைத்திருக்கிறார் நூலாசிரியர் ஏ.எம்.யூசுப். அரபு அல்லாத உலக மொழிகளில் உமர் முக்தாரைப் பற்றிய முதலாவது முழு நூல் இது. 21ம் நூற்றாண்டின் இளைய தலைமுறையின் கைகளில் தவழக்கூடிய விதத்தில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/6/13.  

—-

 

‘ஓ’ ஹோ பக்கங்கள், தொகுப்பு-சுகுமாரன், காலச்சுவடுகள் பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்1,விலை 190ரூ.

எரிபொருள் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? யார் இடியட்? டிவியா? நாமா?, ஏழைகளின் எதிரிகள் யார்? இதுபோன்று சமுதாயத்தில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய 52 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்கங்கள் நூல், பத்திரிகை, நாடகம், டிவி, சினிமா, இளைஞர், பெண்கள், சிறுவர், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் ஈடுபட்டுவரும் ஞாநி எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியாவசிய தகவல்களை சிறப்பாகக் கவிஞர் சுகுமாரன் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/6/13.

Leave a Reply

Your email address will not be published.