நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ.

இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்நூலில் ஒத்திசைவுக்காகவும், பின்புலத்துக்காகவும் பல கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கதைக்கான மரபுக் கோட்பாட்டை முற்றிலுமாக மீறி இப்புதினம் புனையப்பட்டிருந்தாலும், படிக்கும்போது சுவை குன்றியோ, விறுவிறுப்பு குறையவோ செய்யவில்லை. நமது நாட்டின் இதிகாசங்களும், இலக்கியக் கதைகளும் ஏறத்தாழ இவ்வாறே படைக்கப்பட்டுள்ளதால் இப்புதினம் வேறுபட்டுத் தெரியவில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் கேள்விப்பட்ட, நமக்கு அறிமுகமான பெயர்களைக் கொண்டே கற்பனையுடன் கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருப்பதால் கதை நம் கண்முன் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வாசகர்களின் எண்ணத்திற்கேற்ப இப்புதினத்தைப் படைத்துள்ள நூலாசிரியர் அதை எளிய நடையில் வெளிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. நன்றி: தினமணி, 13/10/2014.  

—-

வா வா வசந்தமே, என்.சி. மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 300ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-4.html 6 குறுநாவல்களை கொண்ட புத்தகம் இது. குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் கூலித்தொழிலாளி ஒருவர் விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளிடம் சோதனை என்ற பெயரில் சிக்கி அவதிப்படும் காட்சியை, வா வா வசந்தமே என்ற குறுநாவலில் படம் பிடித்து காட்டி இருக்கிறார். இந்த நூலில் உள்ள இதர குறுநாவல்களிலும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. அனைத்து கதைகளும் படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளன. நூலின் ஆசிரியர் என்.சி. மோகன் தாஸ் கைவண்ணத்தில் ஒவ்வொரு கதையும், புதுவிதமான அனுபவங்களையும், படிப்பினைகளையும் தருகின்றன. ரசித்து படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/10/2014.

Leave a Reply

Your email address will not be published.