நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…, முனைவர் அ.அய்யூப், நவமணி பதிப்பகம், 44, எல்டாம்ஸ் ரோடு, சென்னை – 18. விலை ரூ. 90

“இந்தியா முன்னேற வேண்டுமானால் கனவு காணவேண்டும்” என்றார், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாம் எதை எண்ணி கடுமையாக உழைக்கிறோமோ, அத்துறையில் நமக்கு வெற்றி நிச்சயம் என்கிறார், முனைவர் அ.அய்யூப். சாதாரண நிலையில் இருந்த பல தொழில் அதிபர்கள், பிரமுகர்கள் எப்படி உழைப்பால் உயர்ந்தார்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதிர்ஷ்டம் இருந்தால்தான் முன்னேறலாம் என்று நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நூல்.  

  சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், தமிழ் ஐயா வெளியீட்டகம், அவ்வைக் கோட்டம், 153, வடக்கு தெரு, திருவையாறு – 613204. விலை ரூ. 340

தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய அனைத்துலக அளவிலான காப்பியத் தமிழ் 10-வது ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கில்   படித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். காப்பியத் தமிழுக்கு அரண் சேர்க்கும் வகையில் பல்வேறு ஆய்வுத் தலைப்புகளில் தொகுத்தும், வகுத்தும் ஆக்கி, 95 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன். செந்தமிழில் விழுமியச் சிறப்பிற்குக் காரணம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களே எனலாம். அதிலும் முதன்மையாகத் திகழ்வது காப்பியங்களே ஆகும். அன்று தொட்டு இன்று வரை காப்பியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னிகரற்று விளங்குவது குறிப்பிடத்தக்கவையாகும். காப்பியங்களின் கதை மாண்பும் இலக்கணச்செறிவும், ஆளுமைப் பண்பும் அறிவார்ந்த நிகழ்ச்சிக் கோப்பும் காப்பியத் தமிழின் அரும்பெரும் இலக்கியக் கூறுகளை வெளிப்படுத்துவனவாகும். காப்பியத் தமிழின் மரபினையும், மாண்பினையும் உலகவர் அறிந்துகொள்ளவும், தமிழ்க் காப்பிய வாழ்வியல் நெறிகளைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவும் இந்நூல் பெரிதும் துணைபுரியும்.  

 

சர்க்கரைநோயும் அதைத் தீர்க்கும் முறைகளும், டாக்டர் பச்சையப்பன், கடலங்குடி பப்ளிகேஷன், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 55

இப்போது உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பரவி உள்ளது. சிலர் ‘சர்க்கரை நோய்’ என்றாலே பயப்படுகிறார்கள். அப்படி பயப்பட வேண்டியதில்லை. டாக்டர் சொல்கிறபடி உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, அவர் சொல்கிற மாத்திரைகளைச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஒரு கெடுதியும் செய்யாது. சர்க்கரை நோய் ஏன் வருகிறது, சர்க்கரை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது பற்றி எல்லாம் விரிவாக கொடுத்திருக்கிறார்கள். சிறிய புத்தகம்தான். ஆனால் பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி 19-12-12      

Leave a Reply

Your email address will not be published.