நாரதர் கதைகள்

நாரதர் கதைகள், பாலகுமாரன், விசா பதிப்பகம், பக். 160, விலை 90ரூ.

நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள் மூட்டுவதே அவருடைய தொழில் என்பதான எண்ணம் பலருக்கும் எழுவது இயல்பு. அதன் அடிப்படையிலேயே தமிழில் சில திரைப்படங்களும் வந்துவிட்டன. ஆனால் நாரதர் கோமாளியோ, கோள்மூட்டியோ அல்ல. தந்திரக்காரரோ, பிறரை இழிவுபடுத்துபவரோ அல்ல. மிகச்சிறந்த மகரிஷி, இசை வல்லுனர். தாமும் நல்வழி நடந்து, பிறரையும் நல்வழி நடக்கச் செய்பவர். பக்திக்கு ஒரே சிறந்த உதாரணம் நாரதர். நாரதரைச் சரியாகப் புரிந்துகொள்வோர், வாழ்வில் உயர்ந்து சிறப்புகளை அடைவர் என்று, பல்வேறு புராண நிகழ்வுகளை எடுத்துரைத்து நிறுவுகிறார், எழுத்தாளர் பாலகுமாரன். சுவாரசியமான ஆன்மிக நூல். -கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர், 1/2/2015.  

—-

ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன், விகடன் பிரசுரம், பக். 232, விலை 115ரூ.

இந்த நூலில், 46 நூல்களின், இன்றியமையாத கருத்துகள் விவரிக்கப்படுகின்றன. உறவுகள் வீட்டிற்கு வெளியிலும் உள்ளன என்று விளக்கும் அறப் பளீசுர சதக பாடலுடன் (பக். 16) துவங்கும் இந்த நூல், சிறுபஞ்ச மூலம் உள்ளிட்ட அறநூல்களின் பாடல்களையும், திருவாசகம், திருவருட்பா போன்ற சமய இலக்கிய நூல்களின் பாடல்களையும், விதுரநீதி உள்ளிட்ட நீதிநூல்களின் பாடல்களையும், லலிதா சகஸ்ரநாமம் போன்ற பாராயண நூல்களின் பாடல்களையும் மேற்கோள்காட்டி, விரிவாக விளக்குகிறது. பாடல்களை நகைச்சுவை கலந்து விளங்குவதும், நேரில் கூறுவது போன்றே சொற்றொடர்களை கையாள்வதும், படிப்போர்க்கு சிறிதும் அயர்வு தராது. பீஷ்மர், சிரார்த்தம் செய்தவுடன் பிண்டத்தை, தன் தந்தை சந்தனுவிடம் கொடுக்காது, தர்ப்பைகளின் மீது வைத்த நிகழ்ச்சியை (பக். 120), நாம் அதிகம் கேள்விப்படாத, சாருசர்யா நூலில் இருந்து விளக்குவதும், ஆன்மிக கருத்துகளை அறிவியலோடு இணைத்து கூறுவதும், சுவாரசியமாக உள்ளன. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 1/2/2015.

Leave a Reply

Your email address will not be published.