முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், புதிய எண்-13, சின்னப் ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html

ஆன்மா அழிவற்றது என்பது அனைத்து மதங்களுமே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தத்துவம். இதில் முக்தி அடையாமல் மரணிக்கும் மனித ஆன்மா, முக்தி அடையும் வரை, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறது என்பது ஹிந்து மதக் கொள்கை. புத்த மதமும் இதை ஏற்றுக்கொள்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சில மதங்கள் இந்த மறுபிறவிக் கொள்கையை முற்றிலும் மறுக்கின்றன. ஆனாலும் சில அமானுஷ்யமான நிகழ்வுகளைக் காணும்போது, உலகில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் பலர் மறுபிறவிக் கொள்கையை ஏற்கவும், தயாராகின்றனர். அமெரிக்க வெர்ஜினியா பல்கலைக்கழகப் பேராசிரியர் இயான் ஸ்டீவன்ஸன். பல நாடுகளுக்குப் பயணம் செய்து முற்பிறவி நினைவுகளால் பாதிக்கப்பட்ட பலரைச் சந்தித்து, அறிந்த தகவல்களை ஆய்வு செய்த, மறுபிறவி உண்டு என்று கூறுகிறார். அந்த ஆய்வுகளைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் இந்நூலாசிரியர் இந்நூலை இயற்றியுள்ளார். படிக்க விறுவிறுப்பான 32 அமானுஷ்யமான முற்பிறவிச் சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தான் முற்பிறவியில் எப்படி கொலை செய்யப்பட்டேன் என்பதை நிரூபிக்கும் மூன்று வயது குழந்தை, திபெத்திய மொழி பேசும் அமெரிக்கச் சிறுவன், தனது 10 முற்பிறவி அனுபவங்களைக் கூறும் பெண்மணி என்று ஒவ்வொன்றும் நம்ப முடியாத ஆச்சரியமூட்டும் உண்மைச் சம்பவங்களாக உள்ளன. நன்றி: துக்ளக், 10/7/2013  

—-

 

ஸ்ரீமத் அழகிய சிங்கர் (45ஆம் பட்டம்), கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 200, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-134-6.html

ஸ்ரீமத் அகோபில மடத்தின் 45வது பட்டத்தை அலங்கரித்த மகான் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அவதார வரலாற்றை சீடர் ஸ்தானத்தில் இருந்து கவிஞர் வாலி படைத்திருக்கிறார். இவர் போன்ற அவதார புருஷர்களின் வரலாற்றை எழுதுவது என்பது மூன்று வகையில் இந்த உலகுக்கு நன்மை பயக்கும். ஒன்று ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும். இரண்டாவதாக அது ஒரு இலக்கியமாக மலரும். மூன்றாவதாக, அது ஒரு வரலாற்று ஆவணமாகப் பதியும். கவிஞர் வாலியின் கவித்திறனிலும், பக்தி ஞானத்திலும் உதித்த இவ் அமர காவியம், வைவ சயம வாழ்வின் அடிஆழம் வரை தரிசித்த உணர்வை எழுப்புகிறது. வாலியின் கைக்கோல் அளக்குமோ கார்வானம்? என்ற அவையடக்கப் பணிவு ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென என்ற கம்பரின் அவையடக்கத்திற்கு இணையானது. அழகிய சிங்கரின் வாழ்வும் சிறப்பும் எளிய வெண்பாக்களில் சீர் தளை தட்டாமல் மனதில் பதிந்து போகிறது. அவற்றிற்கான உரைகளும் எளிதினும் எளிது. இராமானுசரையும் நம்மாழ்வாரையும் வேதாந்த தேசிகரையும் ஒருசேர அழகிய சிங்கராக தரிசிக்க வைப்பது ஆச்சாரியன்பால் வாலியின் பக்திக்கோர் எடுத்துக்காட்டு. எதுகையையும் மோனையையும் சிலேடையையும் ஆச்சாரியனின் உயர்வை, பெருமையை உணர்த்தும் கருவிகளாக்கியது வாலியின் கவித்திறன். அறுசீர் விருத்தங்களில் அழகிய சிங்கரின் அருமை பெருமைகளைத் தொகுத்து, அஹோபில மடத்தின் உயர்வை எடுத்தோதி அழியா காவியமாக்கியது வாலியின் காப்பிய அறிவு. ஆச்சாரியனின் பெருமையை நல்கும் இப்புனித நூல், ஓர் அனுபூதிமானுக்கே உரிய ஆக்கமாக பரவசப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 10/7/2013.

Leave a Reply

Your email address will not be published.