அழகான அம்மா

அழகான அம்மா, (ரஷ்ய சிறார் கதைகள்), யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 352, விலை 290ரூ.

குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆசையா?

குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன.

இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட கதை’ எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, தமிழர் மரபில் இருந்து விலகவில்லை. தாய், தந்தை என தனக்கு நெருங்கியவர்கள் வாயினால், கதை கேட்கும் ஆர்வம், குழந்தைகளிடம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், கதைகளுக்கு தான் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது. எத்தனை முறைதான் பழைய கதைகளையே சொல்ல முடியும்? புதிய கதைகள் வேண்டாமா? ரஷ்ய நாட்டு குழந்தைகள் கதைகளை தொகுத்து, தமிழில் தந்திருக்கிறார், யூமா வாசுகி. தமிழிலும் உள்ள சாதாரண பாத்திரங்கள் தான், ரஷ்ய கதைகளிலும் இடம் பிடித்துள்ளன. குழந்தைகளுக்கு பிடித்த நாயும், பூனையும், சேவலும், குரங்கும் இந்த கதைகளில் பாத்திரங்களாகியுள்ளன. ஆனால், சொல்லப்பட்ட விதம் மிக அருமை.

குயில், பூனையுடன், சின்ன சேவலும், ஒன்றாக சேர்ந்து, காட்டில் வீடு கட்டி வாழுகின்றன. சின்ன சேவலை சாப்பிட நரி ஒன்று செய்யும் தந்திரமும், தன் குழந்தை போல உள்ள சின்ன சேவலை காக்க, குயிலும், பூனையும் சேர்ந்து செய்யும் முயற்சியும் அபாரம். தாய் – தந்தை சொல்வதை கேட்காவிட்டால் என்ன சிக்கல் ஏற்படும் என்பதை, குழந்தைகளுக்கு பிடித்த கதாபாத்திரங்களை வைத்து உருவகப்படுத்தி கூறி விட்டார் ரஷ்ய ஆசிரியர் ஏ.என்.டால்ஸ்டாய். கதைகளுக்கு வலிமை சேர்க்க படங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

கதை படிக்கும் குழந்தைகளுக்கும், கதை கேட்க விரும்பும் குழந்தைகளுக்கும் கதை சொல்ல நினைக்கும் பெரியவர்களுக்கும், 50 கதைகள், இந்த தொகுப்பில் காத்திருக்கின்றன.

– ஜே.பி.

நன்றி: தினமலர், 21/8/2016.

Leave a Reply

Your email address will not be published.