பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், பக். 496, விலை 300ரூ.,

இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது.
பொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன.

இதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது.

வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் 1972 வரை அவர் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 1891 ஏப்ரல் 29ல் புதுவையில் பிறந்தார் எனத் துவங்கும் இப்பகுதி, 1972ல் பாரதிதாசன் உருவச் சிலையை, அவரது பிறந்த நாளான ஏப்ரல் 29ல் புதுவை அரசு திறந்து வைத்தது என்ற நிகழ்வோடு முடிந்துஉள்ளது.

பாரதிதாசனின் கவிதைகளில், முதலில் அமைந்துள்ளது காதல் கவிதைகள். இப்பகுப்பில், 68 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

நுாலின் முதல் கவிதை, ‘பொன் அத்தான்!’ இதில், சீரைத்தான் கோரித்தான், தேரிற்றான் ஏறித்தான், திருப்புகின்றான் தோழிப்பெண்ணே, என் அத்தான், என்றவாறு, ‘தான் – தான்’ என்னும் சொல்லிறுதி பெற்ற சொற்களோடு இன்பம் அளிக்கிறது.

வெண்பா, அகவல், விருத்தம், கலி எனப் பண்டைய யாப்பில் அமைந்த எளிய பாடல்களையும், கண்ணி, சிந்து வகையில் அமைந்த பாடல்களையும், இசை, – தாளம் என வகுத்துப் பாடப்பெற்ற பாடல்களையும் கொண்டு அமைந்துள்ளது இக்கவிதை நூல்.

பாரதியாரின் கவிதை, வெள்ளையர் காலத்தில் சமூக பிரக்ஞையை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமிழ், தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் என்றார் மிகையில்லை.
பாரதிதாசனின் புலமையையும், பாக்களுக்கு அரசராக விளங்கிய அவரின் மேன்மையையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்

நன்றி: தினமலர், 10/12/2017.

Leave a Reply

Your email address will not be published.