எனது சிறிய யுத்தம்

எனது சிறிய யுத்தம், லூயிஸ் பால் பூன், தமிழில் பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ.

உலகப் போரைப் பேசும் நாவல்!

போர்க்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பேசும் இலக்கியப் படைப்புகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டபோது அவை வாசகர்களிடையே வரவேற்பை இழந்திருந்தன. நிச்சயமற்ற அடுத்த நொடியைப் பரிதவிப்போடு எதிர்கொள்ளும் சாமான்யர்கள், ஒவ்வொருநாளும் எதிர்கொண்ட நெருங்கிய உறவுகளைக் குண்டுகள் சிதைத்த உடல்களாகக் கண்கொண்டு காண நேரும் அவலம், குழந்தைகளின் ஓலம் என போர்க்காலங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இன்னதுதான் நிரம்பியிருக்கும் என்று போர் இலக்கியங்கள் குறித்த சில எண்ணங்கள் வாசகர்களுக்கு இருக்கின்றன. அவையே போர் இலக்கியங்களை அணுகத் தயங்குவதற்குக் காரணமாகிவிடுகின்றன. எனவே போர், கலவரம், வன்முறை போன்றவற்றைக் களமாகக் கொண்டு கலைகள் வெளிப்படும்போது எடுத்துரைக்கும் விதத்தில் சில யுக்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் தன்மையிலிருந்து விலக வேண்டிய தேவையும் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் குறித்த டச்சு இலக்கியத்தின் தலைசிறந்த புத்தகமாகக் கருதப்படும் நாவல், லூயிஸ் பால் பூனின் ‘எனது சிறிய யுத்தம்’. இரண்டாம் உலகப் போரின்போது தான் நேரடியாகப் பார்த்ததையும், அனுபவித்ததையும்தான் நாவலாக எழுதியிருக்கிறார். சாமான்யர்களின் அன்றாடங்களே இந்த நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றன. நிச்சயமற்ற நாளை, அடுத்த நொடி தங்கள் காலடி நிலம் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போய்விடக்கூடும் என்பதான சூழல், இப்படியான நெருக்கடிநிலையிலும் மனிதர்களிடம் வெளிப்படும் கீழ்மை என சிறு சிறு வாழ்க்கைப் பதிவுகளின் தொகுப்பாக இந்நாவல் உருக்கொண்டிருக்கிறது.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அத்தியாயங்கள். அடுத்த வரியேகூட சில நேரங்களில் தொடர்பில்லாமல் இருக்கிறது. போரின் நிச்சயமற்ற அடுத்த நொடியைப் போலவே லூயிஸின் அடுத்த வரியும் யூகிக்க முடியாதது. ஒரு அத்தியாயம் இதைத்தான் பேசுகிறது என வரிசைக்கிரமமாகத் தொகுத்துவிடவும் முடியாது. இப்படியான யுக்தியால் ஒட்டுமொத்த வாசிப்பின் முடிவில் கதை என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியவில்லை. ஒரு கதையாக, உணர்வாக வாசகர்களைப் பின்தொடரச் செய்யாமல் கழிவிரக்கமின்றி துயரத்தை அணுகும் விதமாக இந்த நாவலை அணுகியிருக்கிறார் லூயிஸ்.

‘கழிப்பிடத்துக்கு மேலாக இந்த ஷெல்பில் ஒரு ரொட்டியின் ஐந்தில் ஒரு பங்கு இருந்தது, அதைத் தேடித்தான் வந்தேன்’ என்ற வரியோடு ஒரு அத்தியாயம் முடிகிறது. வேறு சில பின்னணிகளுக்கு இந்த வரி நம்மை இட்டுச்செல்கிறது. ‘எங்கு என்று அறிய முடியாத எங்கேயோ குண்டுகள் விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது’ என்று ஓரிடத்தில் எழுதுகிறார். தாக்குதலுக்கு ஆளாகப்போகிறோம் என்று உணர்ந்து குழிக்குள்ளே பதுங்கியிருக்கும் வேளையில் அந்தக் காத்திருப்பின் அவஸ்தை தாளாமல், ‘ஏன் அவர்கள் இன்னும் குண்டு போட்டுத் தொலைக்க மாட்டேனென்கிறார்கள்’ என்கிறாள் ஒரு தாய். உணர்வுரீதியாக, ஒரு கதையாக நம்மால் பின்தொடர முடியாமல் ஒரு விந்தையான களத்தில் பயணிப்பதுபோன்று இருந்தாலும்கூட நமது மனசாட்சியைத் தொந்தரவுக்குள்ளாக்கும் வரிகளாகவே ஒவ்வொன்றும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

‘எனது சிறிய யுத்தம்’ நாவல் 1947-ல் வெளியாகியது. வாசகர்களிடையே பெரும் வரவேற்பிருந்தும் 63 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது. ஆங்கிலத்தில் வெளியான ஆறு வருடங்களில், பெர்னார்ட் சந்திராவின் சிறப்பான மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். இந்நாவல் இந்திய மொழிகளுள் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான்.

நன்றி: தி இந்து, 2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *