ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம், செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 142, விலை 90ரூ.

சமகால வரலாற்று ஆவணம்!

திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல் ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல் ‘சுதேச மித்திரன்’தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது.

இதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, 1907ம் ஆண்டில், குருமலை சுந்தரம் பிள்ளை என்பவர், எழுதிய நூல்தான் இது.

ஐயர் தமது வசனங்களிலும், எழுத்துக்களிலும் காட்டிய முற்போக்கு சீர்திருத்தங்களை, தன் வாழ்விலேயே செய்து காட்டிய தீரர் என்பதை இவர் வாழ்வில் உணர முடிகிறது. இவரது மத்த மகள் சிவப்பிரியை 12 வயதில் விதவையானார். அதே ஆண்டில் அவருக்கு மறுமணம் செய்வித்து, பலரது விரோதத்திற்கும் ஆளானார். இவரை ஜாதியிலிருந்து நீக்கினர். இவரது மனைவியும் துயரத்தால் இறந்தார்.

இவர் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என்ற மூன்று துறைகளிலும் தடம் பதித்து, முத்திரை பதித்தார். உயர் ஜாதியினர் பின்பற்றிய விதவை நிலை, அவர் மீது சுமத்தப்பட்ட வன்முறைகள், பால்ய மணம், உணவு பரிமாறுவதில் பாகுபாடு, கடற்பயணம் மீதான தடைகளைச் சாடினார். அவரே, அவைகளை மீறியும் வாழ்ந்து காட்டினார்.

சுதேசி இயக்கத்தை சென்னையில் நடத்தினார். வ.உ.சி.யின் கப்பல் கம்பெனிக்கு நிதி திரட்டினார். சென்னை மகாஜன சங்கம், இந்தியதேசிய காங்கிரஸ் துவங்கி வைத்து, சமூக மாற்றங்களை உருவாக்கினார். இவர் தனிமனித ஆசார சீர்திருத்தம், சமுதாய ராஜாங்க சீர்திருத்தம் இரண்டையும் முன்வைத்து வெற்றி கண்டார்.

‘ஊசி மிளகாயை அறைத்தால் போல் காரமாய் எழுத வேண்டும்’ என்பது இவரது எழுத்தின் வெற்றி ரகசியம். சீர்திருத்த கருத்துடன் எழுச்சியாய் பேசும் ஆற்றலும் மிக்க இவரது வாழ்க்கை வரலாறு, பின்பற்றத்தக்க சுவைமிக்க தேனாறு. நூலின் முகப்பிலும், முன்னுரையிலும், ‘குருமலை சுந்தரம் பிள்ளை’ எனவும், பதிப்பாசிரியர் தனது அணிந்துரையில் ‘குறுமலை சுந்தரம் பிள்ளை’ எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் முன்னுரையின் இறுதியில், ‘குருகுதாச பிள்ளை’ எனவும், ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். இந்த குழப்பங்களை அடுத்த பதிப்பில் நீக்க வேண்டும்.

நூலாசிரியர் பற்றி, பின்னட்டையில் குறிப்பிடுவதை தவிர்த்து, நூலுக்குள்ளேயே, அவரது படத்துடன் இன்னும் விரிவாக கொடுத்திருக்கலாம்.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 3/4/2016

Leave a Reply

Your email address will not be published.