இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள்

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள், என்.அனுஷா, முல்லை பதிப்பகம், பக். 166, விலை 150ரூ.

முப்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நுால். கதையின் மாந்தர்கள் நமக்குள்ளே, நாம் பார்க்கும் மனிதர்கள் தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது நுாலின் தலைப்பு. வெவ்வேறு விதமான பல மனிதர்களை அறிமுகம் செய்கின்றன இக்கதைகள்.

‘முதல் கவிதை’ எனும் முதல் கதையானது, பிரிந்த காதலர்களின் திடீர் சந்திப்பின் போது நிகழும் ஒரு மனப்போராட்டத்தை எடுத்துரைக்கிறது. யாயும் யாயும்… எனும் இலக்கிய வரிகளைத் தன் கதைக்குத் தக்க கவிதையாக்குகிறார், ஆசிரியர்.

‘புரமோஷன்’ கதையில், டேபிள் சுத்தம் செய்யும் பணியாள் சந்திக்கும் சமூக இடர்ப்பாடுகள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. ‘மீண்டும்’ கதையில், தன் கணவன் இறந்து போனதால் கிடைக்க வேண்டிய பென்ஷனுக்கு வேண்டி, பேசும் சீர்திருத்தக் கருத்துகள் அருமை.

‘இந்த ஒரு நாளாவது’ எனும் கதையில், ஒரு சாதாரண ஆழ்வார் எனும் கூலியாள், தான் வெள்ளையடித்த வீட்டுக்காரி பாலியல் தொழிலாளி என அறிந்ததும், இந்த ஒரு நாளேனும் இந்த வீடு சுத்தமாக இருக்கட்டும் என வெளியேறும் போது, ஒரு சமூக அக்கறையாளனாக நிமிர்ந்து நடக்கிறான்.

‘கல்லில் ஒரு கவிதை’ ஒரு வரலாற்றுச் சிறுகதை, சிற்பிக்கு ஏற்படும் சிக்கல். அதைத் தீர்த்து வைக்கும் அமைச்சரின் சாதுர்யம் என கவிதைச் சுவையோடு வரலாற்றையும் இணைத்துள்ளது.

இவ்வாறு காதல், மனிதநேயம் எனக் கதைகள் யாவும் அன்பையே மையமாகக் கொண்டு வலம் வருகின்றன. அவர்களோடு பழகி முடித்த நிறைவு, கதைகளைப் படித்து முடித்த பின் உண்டாகிறது. இத்தகைய மனிதர்களோடு பயணிக்க தாமதம் வேண்டாம்.

– கொற்றவை

நன்றி: தினமலர், 22/12/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.