இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திரமவுலி, செங்கை பதிப்பகம், பக். 248, விலை 150ரூ.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்…’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, உழவுத் தொழிலின் மேன்மை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் இந்நூல் பல புதிய செய்திகளை தருகிறது. நாம் உண்ணும் உணவிற்குப் பின்னால் பெயர் தெரியாத பலரின் அரிய சக்தியும், உழைப்பும் இருப்பதை இந்நூல் விளக்குகிறது.

18ம் நூற்றாண்டில் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டதன் சூழ்நிலை குறித்தும் (பக். 27), விவசாயம் செய்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும், ‘விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல; அவள் ஒரு தாய்’ என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூற்றை விளக்கியும் (பக். 43), வேளாண்மை குறித்த பல செம்மொழிப் பாடல்களைக் கூறியும் (பக். 49).

‘பூச்சிக்கொல்லிகளாலும், ரசாயன மருந்துகளாலும் உண்ணும் சோறும், பருகும் நீரும், மெல்லும் வெற்றிலையும், பாலும், மலடாகிப் போகும் மண்ணும்’ என விளக்குவதும் (பக். 54) சிறப்பாகும். முனைவர் அரு.சோலையப்பன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அரியனூர் ஜெயச்சந்திரன், ஜே.ஸி.குமரப்பா, பெரம்பலுார் மாவட்டப் பெண் விவசாயி பூங்கோதை குறித்தும் எழுதியுள்ள செய்திகள், நம்மை வியக்க வைக்கின்றன.

மரங்களைக் காப்பாற்ற தன் உயிரையே ஈந்த, பிஷ்னோய் அம்ருதா என்ற பெண்மணி குறித்தும், அவரது கருத்தை ஆதரித்த, 363 கிராம மக்களின் தலைகளும் மண்ணில் உருண்ட செய்தியும் சிந்தனையைத் தூண்டும்.
இந்நூலை படித்து முடிக்கும் அன்பர்கள், இனி இயற்கை வேளாண்மைப் பொருட்கள் விற்கும் அங்காடிகளுக்கே செல்வர் என்று உறுதியாகக் கூறலாம். அனைவரும் தவறாது படித்துப் பயன் பெற வேண்டிய அருமையான நூல்.

–பேரா., டாக்டர் கலியன் சம்பத்து

நன்றி: தினமலர், 6/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *