கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300.

மூடநம்பிக்கை, பேராசை, அதிகார வேட்கையைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடவுள்களையும் ஆன்மிகத்தையும் சரக்காக விற்பனை செய்யும் ‘நவீன மோஸ்தர்’ சாமியார்கள் பெருகிவருகின்றனர். அவர்கள் ஈட்டும் பரிவர்த்தனை மதிப்பில் 99%-ஐத் தங்கள் ‘ஆன்மிகக் கூடங்களில் பதுக்கி வைத்துக்கொள்ளவும், தொழில், வணிகத்தில் முதலீடு செய்துகொள்ளவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் உதவுகிறார்கள்.

மக்களின் மத உணர்வு, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைப் பெற இந்த நவீன ஆன்மிகவாதிகள் துணைபுரிகிறார்கள்.இந்தியாவிலுள்ள முக்கிய ஊடகங்களும் அரசு உதவி பெறும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமும் திரட்டியுள்ள புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுகிறார் மீரா நந்தா, ‘கடவுள் சந்தை’ எனும் நூலில்: 1) ஐந்தாண்டுகளில் (2002-2007) இந்தியர்களிடையே மத உணர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 30 விழுக்காட்டினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் முன்பைவிட மிகவும் மத உணர்வு கொண்டவர்களாகிவிட்டதாகக் கூறினர்.

இரண்டே இரண்டு விழுக்காட்டினர் இதற்கு நேரெதிரான கருத்தைக் கூறினர். 2) கல்வியும் நகர வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பும் இந்தியர்களை முன்பைவிடக் கூடுதலான மத உணர்வு கொண்டவர்களாக்கியுள்ளன. 3) கிராமப்புற, படிப்பறிவற்ற மக்களைக் காட்டிலும் நகர்ப்புற, படித்த இந்தியர்களிடத்தில்தான் மத உணர்வு அதிகமாக உள்ளது. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோருமே கடவுள்களை நாடுகின்றனர். குருக்களுக்கும் புரோகிதர்களுக்கும் பூசாரிகளுக்கும் சோதிடர்களுக்கும் வாஸ்து நிபுணர்களுக்கும் ஆன்மிக ஆலோசகர்களுக்கும் நல்ல யோகம் அடித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய வகை மதச்சார்பின்மை, பெரும்பான்மை மதத்துடன் நெருக்கமான, அதற்கு ஊட்டம் கொடுக்கக்கூடிய உறவை வளர்த்துக்கொள்ள அரசு இயந்திரத்தை அனுமதிக்கிறது. நவ-தாராளவாத அரசும் தனியார் துறையும் பங்குதாரர்களாக ஆகிவிட்டதால் அரசு, கார்ப்பரேட் துறை, இந்து நிறுவனம் மூன்றுக்குமிடையே சொகுசான முக்கோண உறவு ஏற்பட்டுவிட்டது இந்தப் போக்கு, பல்வேறு சமயங்களைப் பின்பற்றிவரும் இந்திய மக்களிடையே பொதுவாக இருந்துவந்துள்ள சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்குக் குழிபறிக்கும் சுயநல ‘ஆன்மிக-அரசியல்வாதி’ கூட்டுக்கு வலுசேர்ப்பதால் நாட்டுக்கு ஏற்பட்டுவரும் பெருங்கேடுகளை எடுத்துக்கூறுகிறது மீரா நந்தாவின் ‘கடவுள் சந்தை’.

– எஸ்.வி.ராஜதுரை.

நன்றி: தமிழ் இந்து, 07.12.2019.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000025934_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.