கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை, மு.ஞா.செ. இன்பா, பந்தள பதிப்பகம், பக். 412, விலை 400ரூ.

திரைப்பட ரசிகர்களால் “நடிகர் திலகம்‘’ என்று பாராட்டப்பட்ட சிவாஜி கணேசனைப் பற்றி வெளிவந்திருக்கும் மற்றொரு நூல்.

சிவாஜியின் இயற்பெயர் கணேசமூர்த்தி என்பதில் தொடங்கி, திருச்சியில் கம்பளக்கூத்துக்காரர்கள் நடத்திய “கட்டபொம்மன்’‘ நாடகத்தில் சிறுவன் சிவாஜி வெள்ளைக்கார சிப்பாயாக நடித்தது (முதல் நாடக வேடம்), அடுத்து யதார்த்தம் பொன்னுசாமியின் மதுரை பாலகான சபாவில் சேர்ந்து ராமாயண நாடகத்தில் சீதை வேடம் ஏற்றது, ஒரே நாடகத்தில்(“இழந்த காதல்’‘) சிவாஜியும், எம்.ஆர். ராதாவும் போட்டி போட்டு நடித்தது, “கதரின் வெற்றி‘’ நாடகத்தைப் பார்த்து கைதட்டி ரசித்து காமராஜர் பாராட்டியது, முதல் படமான “பராசக்தி‘’யில் இருநூற்றைம்பது ரூபாய் ஊதியம் பெற்ற சிவாஜி, இரண்டாவது படமான “பணம்‘’ படத்தில் இருபத்தையாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றது (“பணம் எனக்கு பணம் தந்தது’ என்று சிவாஜி கூறினார்) – இப்படி புதிது புதிதாக ஏராளமான செய்திகள் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் இருக்கின்றன.

சிவாஜியின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த பல முக்கிய நிகழ்வுகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக, சிவாஜி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு உடனிருந்து பணிவிடை செய்த மேலூர் முத்தையா என்பவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரது மகளுக்கு தனது சொந்த செலவிலேயே திருமணம் செய்து வைத்தது, சிவாஜியின் திருமணம், எந்த சமஸ்கிருத மந்திரமும் ஓதப்படாமல், தமிழாசிரியர் ஒருவர் திருக்குறள் படிக்க தமிழ் முறைப்படியே நடந்தது, ஆங்கில நடிகர் மார்லன் பிராண்டோ சிவாஜியிடம், சத்யஜித் ரேயின் படங்களைப்பற்றி குறை கூற, சிவாஜி ஆவேசமாக சத்யஜித் ரேக்கு ஆதரவாகப் பேச, மார்லன் பிராண்டோ திகைத்துப் போனது – இப்படி பற்பல செய்திகள். எல்லாமே சுவையானவை என்பதுதான் சிறப்பு.

இதிலுள்ள புகைப்படங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே பல நூல்களில் வெளிவந்தவையே. இன்னும் கவனம் செலுத்தி அரிய படங்களாக தேர்ந்தெடுத்திருக்கலாம். மற்றபடி சிவாஜியைப்பற்றி வந்திருக்கும் சிறப்பான நூல்களின் பட்டியலில் இந்நூல் நிச்சயம் இடம் பெறும்.

நன்றி: தினமணி, 16/1/2017.

Leave a Reply

Your email address will not be published.