காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி,  பக்.356, விலை ரூ.300. 

தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் சித்திரிக்கும் உலகம், சித்திரிக்கும் முறை, படைப்புகளின் அழகியல்தன்மை என இதிலுள்ள கட்டுரைகள் படைப்புகள் குறித்து பலவற்றைப் பேசினாலும், ஒரு படைப்பாளியின் சாரமாக விளங்குகின்ற மையப்புள்ளியைத் தொட்டுச் செல்ல மறக்கவில்லை.

‘சாதி மற்றும் நிலவுடமைப் பண்புசார்ந்த சமூகம், பெண் ஒடுக்குதலை அதன் பண்பாட்டு அலகாகவே கட்டமைத்திருக்கும் கொடுமைகளைத் தனது (புதுமைப்பித்தன்) எள்ளல் மொழியால் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புனைவுகளில் பொருளாதார முரண்களைப் பல கோணங்களில் பதிவு செய்யும் முயற்சிகள் தொடங்கின.

இதில் புதுமைப்பித்தன் பதிவுகள் தனித்தவை’ என்று புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிய விமர்சனம், ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எழுதிய கு.ப.ரா., மீறல்களைக் காட்சிப்படுத்துபவர் அல்லர். மீறல்களுக்கான சூழல்களைக் காட்சிப்படுத்துபவர். எந்தக் கதையின் முடிவும் மீறலில் நிலை கொள்வதில்லை. கலாசாரத் திரையைக் கிழித்துக் கொண்டு அவை ஒருபோதும் வெளியேறுவதில்லை என்ற கு.ப.ரா.படைப்புகளைப் பற்றிய பார்வை, ‘அவர் பிறவிக் கலைஞன் என்று சொல்லுமளவுக்கு மொழியைத் தன்மனம் நினைத்தபடி யெல்லாம் வார்க்கும் வல்லமை பெற்ற ஒரு மகா கலைஞர் என்பதால், அவரையும் மீறிச் சமூகப் பிரச்னைகளை அவர் கதைகள் தொட்டுப் பேசியதும் உண்டு’ என்ற லா.ச.ரா. படைப்புகளைப் பற்றிய பதிவ, ‘பிறரால் எழுத முடியாத தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியை செல்லப்பா எழுதியிருக்கிறார் என்று சி.சு செல்லப்பாவின் படைப்புகளை பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக சொல்லலாம். மௌனி,நகுலன்,சுந்தர ராமசாமி,ஆதவன்,கோபிகிருஷ்ணன்,அசோகமித்திரன்,ஆகியோரின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் பற்றிய வெளிச்சத்தை ஏற்படுத்தும் நூல்.

ன்றி:தினமணி, 13-04-2020.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *