நாயகிகளின் நாயகன்

நாயகிகளின் நாயகன், சுரேஷ் பிரதீப், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ.

மாசிலன் என்ற தாத்தாவின் சாவுக்குச் செல்லும் பேரனின் மனநிலையை விவரிக்கும் கதையில் தொடங்கும் இத்தொகுப்பு ஊருக்கு அம்மாவுடன் செல்லும் பேரன் தாத்தா வெட்டிய குளத்தை ரசிக்கும் ஆலரசு குளம் என்ற சிறுகதையில் முடிவடைகிறது.

இந்த இரண்டு ஊர்திரும்புதல்களுக்கு இடையே சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை உலகம் நம்மை நோக்கி விரிந்துகிடக்கிறது. தஞ்சைப் பகுதிக்கு உரிய வசைச்சொற்களும், உரையாடல்களும் நிறைந்த கதைகள்.

எல்லா கதைகளிலும் ஊரும் அங்கிருக்கும் உறவுகளின் ஏதோவொரு வகைப்பட்ட உணர்வுகளும்தான். அம்மாவிடம் இருந்து தப்பி. புனேவுக்கு வேலை கிடைத்துப் போயும் அவளை மறக்க முடியாத, மகள் பிறந்து அவளிடம் அம்மாவை ஒரு தருணத்தில் காணக்கூடிய பெண்ணின் கதையை ‘சொட்டுகள்’ சிறுகதையில் காணலாம். ஆனால் அம்மா என்ற நினைவு அவளுக்கு வழக்கமான பாச நினைவு அல்ல என்பது இந்த கதையை முக்கியமானதாக்குகிறது.

சியாரா லியோனைச் சேர்ந்த பெண்ணுடன் உரையாடும் அகம் என்ற சிறுகதையும் குறிப்பிடத்தகுந்தது. மனிதர்களையும் அவர்களின் உறவுகளையும் ஆழமாக நோக்கும் சிறுகதைகளாக இவற்றை வகைப்படுத்தலாம். தனக்குள் நிகழ்ந்த திடுக்கிடல்களையே இவ்வாறு சிறுகதைகளாக எழுதியிருப்பதாகக் குறிப்பிடும் சுரேஷ் பிரதீப் நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கைக்கு தன் புனைவுலகு நகர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

நன்றி: அந்திமழை, 1-11-2017.

Leave a Reply

Your email address will not be published.