ஊர்சுற்றிப் புராணம்

ஊர்சுற்றிப் புராணம்,  ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான்.

இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஊர்சுற்றிகளால்தான் பிற பகுதிகளுக்குத் தெரிய வந்தன என ஊர் சுற்றுவதை ஆதரித்துப் பேசும் நூலாசிரியர், ஊர் சுற்றுவதற்கு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? ஊர் சுற்றுவதற்குத் தடையாக உள்ளவை எவை? என்பதையும் விளக்குகிறார்.

பெண்கள் ஊர்சுற்றிகளாக மாறுவதில் எந்தவிதத் தடையுமில்லை. படிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏன் ஊர்சுற்றியாக அவர்கள் மாறக் கூடாது? எனக் கேட்கிறார். ஊர்சுற்றிகள் மிகுந்த ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறினால் பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்.

ஊர்சுற்றுவது என்பது உல்லாச வாழ்வுக்கல்ல; சமூகத்தின் மேன்மைக்கே. ஊர்சுற்றிகள் மக்கள் நலத்துக்கான காரியங்களைச் செய்ய வேண்டும். சமுதாயத்தையும் உலகத்தையும் முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இம்முயற்சியால் அவர்கள் கொஞ்சமாவது வெற்றி பெற்றால், பெருமகிழ்ச்சியடைவார்கள் என்கிறார் நூலாசிரியர். ஊர் சுற்றுதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகவும் சுவையாக அலசி ஆராயும் நூல்.

நன்றி: தினமணி, 22/1/2018.

Leave a Reply

Your email address will not be published.