பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ.

சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத்.

பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன.

நிலம், பண்பாடு, மொழி, இலக்கியம் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஜாதிய முரண்பாடுகளைக் களைய முடியும் என்பது பண்டிதரின் உறுதியான நம்பிக்கை.

கல்வியறிவே அளப்பரிய நற்பண்புகளை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதி மதக்கீழ்மையிலிருந்து மீட்கும் எனும் பண்டிதரின் கல்விச் சிந்தனையும், தொழிற்கல்வி, பெண் கல்வி, அனைவருக்கும் இலவச கல்வி போன்ற பண்டிதரின் முற்போக்குச் சிந்தனைகளும் போற்றற்குரியவை.

அத்வைத அமைப்பை நிறுவிய பண்டிதர் பிற்பாடு பவுத்தத்திற்கு மனமாற்றம் செய்ததையும், ஜாதிபேதமற்ற சமூக கட்டமைப்புக்கு பவுத்தமே பெரிதும் துணைபுரியும் எனும் அவரது நோக்கும் விரிவாகக் கூறப்படுகின்றன.

அயோத்திதாசர் நிறுவிய அத்வைத அமைப்பு செயலிழந்த நிலையில், சமூக விடுதலைக்கு பவுத்தமே நல்வழி என்று மாறியதையும் அரசியல், இலக்கியம், இதழியல் என்ற பன்முகமாக பண்டிதர் விளங்கியதையும் காணலாம்.

திருக்குறளின், ‘எண்குணத்தான்’ எனும் சொல் புத்தரையே சுட்டுவதாகக் கூறிய பண்டிதரின் சொல்லாய்வும், அவ்வையார் பற்றிய ஆய்வும் சிந்திக்கத்தக்கது.

–மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி:தினமலர், 27/5/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.