பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), த.முத்தமிழ்,  காவ்யா, பக்.418, விலை ரூ.420.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக, புற, அற நூல்கள் உள்ளன. அவற்றில் அகம், புறம் சார்ந்த கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது ஆகிய ஏழு இலக்கியங்களின் பதிப்பு வரலாற்றை முழுமையாகத் தருகிறது இந்நூல்.

ஓர் இலக்கியத்தைக் கூறுவதற்கு முன்பாக, அவ்விலக்கியம் குறித்த பதிப்புகள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், அவ்விலக்கியத்திலுள்ள பாட பேதங்கள், குறிப்புரைகள், துறை விளக்கம், அட்டவணை, பிழையும் திருத்தமும் உள்ள பக்கங்கள், மறுபதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் முதலியவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

’கார்நாற்பது’ நூலைப் பதிப்பித்த (1918) பரங்கிப்பேட்டை கோ.இராமசாமி பிள்ளை எழுதிய முகவுரையில், “பண்டைக் காலத்து ஆசிரியர்களெல்லாரும் தாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு சிறிதும் திரிக்காது கண்டவாறு கூறுவர். பிற்காலத்துப் புலவர்களோ வர்ணனைகளைப் பெருக்கி உயர்வு நவிற்சியணியாக அவற்றை வருவித்துக் கூறுவர். பண்டைப் பனுவலில் தற்குறிப்பேற்றமும், இசைந்த உவமைகளுமே மலிந்து காணப்படுதலின்றி வேறு அணிகள் காணப்படா என்று கூறுவதிலிருந்து பண்டை புலவரின் உண்மைத்தன்மை புலப்படுகிறது” என்று அன்றைக்கு அவர் கூறியது, இந்நூலைப் படித்த பின்பு இன்றைக்கும் அது பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது.

காரணம், மறுபதிப்பு என்கிற பெயரில் இன்றைக்கு ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யப்பட்டு பதிப்பிக்கப்படுகின்றன. 

சில நூல்களுக்கு உரையாசிரியர்களின் சிறப்புப் பாயிரமோ, பதவுரையோ, குறிப்புரையோ, இலக்கணக் குறிப்போ, அருஞ்சொற்பொருள் விளக்கமோ இல்லாததையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது சிறப்பு. 

இனி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பாக, இந்த ஏழு நூல்களையும் எடுத்துப் பதிப்பிப்பவர்கள் இந்நூலின் தரவுகளைத் துணைக்கொண்டு பதிப்பித்தால் அவர்கள் பதிப்பு செம்மைப்படும் என்பது உறுதி. 

நன்றி: தினமணி, 21/3/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.