பத்துப்பாட்டு யாப்பியல்
பத்துப்பாட்டு யாப்பியல், மு.கஸ்தூரி, சந்தியா பதிப்பகம், பக்.584, ரூ.500.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய இலக்கண வகைகளுள் யாப்பிலக்கணமும் ஒன்று. செய்யுள் இயற்ற இன்றியமையாதது யாப்பிலக்கணம்.
தொல்காப்பிய செய்யுளியலில் தொடங்கி, காலந்தோறும் பா வடிவங்களிலும், உறுப்புகளிலும் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது யாப்பிலக்கணம்.
பாக்களின் வடிவ அமைப்பு, ஒலிநலக் கூறுகள் முதலியவற்றை ஆராயும் இலக்கணத் துறை இது. யாப்பியல் குறித்து ஆய்வு செய்வோர் அருகி வரும் இந்நாளில், முனைவர் பட்ட ஆய்வுக்கு யாப்பியலைத் துணிச்சலும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர். மேலும், குமரகுருபரரின் யாப்பியல்39; என்பது குறித்து முன்பேஆராய்ந்து நூல் எழுதியுள்ளார் என்பதால், யாப்பியல் குறித்த தெளிவான புரிதல் இந்நூலில் பளிச்சிடுகின்றது.
சங்க இலக்கியங்களில் யாப்பியல் தொடர்பான பலவகையான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பத்துப்பாட்டின் யாப்பியலைத் தனித்து, விரிவாக ஆராயும் இவ்வாய்வு, தொல்காப்பியச் செய்யுளியல் இலக்கணங்களைப் பத்துப்பாட்டில் பொருத்திப் பார்த்து ஆராய்கிறது. மேலும், காக்கைப்பாடினியம் முதலிய நூல்கள் முன்வைக்கும் பிந்தைய மரபின் இலக்கணங்களுக்குத் தோற்றுவாயான நிலைகள் பத்துப்பாட்டில் எவ்வாறு காணப்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளது.
தொல்காப்பியச் செய்யுளியலும் பிந்தைய யாப்பு மரபுகளும், பத்துப்பாட்டுப் பாவியல் (ஆசிரியம்), பத்துப்பாட்டுப் பாவியல்(வஞ்சி), பத்துப்பாட்டு தொடையியல் (எதுகை), பத்துப்பாட்டுத் தொடையியல் (மோனை) ஆகிய ஐந்து இயல்களைக் கொண்டு விளங்கும் இவ்வாய்வு நூல், யாப்பியல் குறித்த தெளிவை ஏற்படுத்துகிறது.
நன்றி:தினமணி, 2/7/17