பூமியின் பாடல்கள்

பூமியின் பாடல்கள் (வட கிழக்கு இந்தியக் கதைகள்), கைலாஷ் சி. பரல், தமிழில் சுப்பிரபாரதி மணி, சாகித்ய அகாடமி, பக். 204, விலை 140ரூ.

வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல் திரட்டிய, 15 எழுத்தாளர்களின் கதைகளை, தமிழாக்கம் செய்திருப்பவர் சுப்பிரபாரதி மணி.

அசாம், மணிப்பூரி, மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து பிரதேச, 16 கதைகளில், சில நெடுங்கதைகள், பல் வகையான மையப் பொருள்களில், அவரவருக்கே உரித்தான நடையில் படைத்தவற்றில், சில கருத்துமிக்க அழுத்தமான கதைகளும், இடம் பிடித்திருக்கின்றன. கதையோட்டங்களில், அம்மக்களின் வெகு இயல்பான நடைமுறை வாழ்க்கை, எளிமையான கதாபாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பட்டிருப்பதை சுவைக்க முடிகிறது.

இந்தியாவின், ஆறு வடகிழக்கு மாநிலங்களின் நிலப்பரப்புகளும், கலாசாரங்களும், பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும், நம்பிக்கைகளும், பேச்சு வழக்குகளும், சாயல்களும், தோணிகளும், தொன்மங்களும், கலைகளும், கதைத்தளங்களும் இன்ன பிறவும் மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவைகளை, பிற நாட்டவர் போல் பார்க்கும் சூழல் இன்றும் நிலவுகிறது.

காணும் திசைகள் எல்லாம் மலைகள், பள்ளத் தாக்குகள், மழைகள், அருவிகள், ஆறுகள், பசுமைகள், பாதைகள் யாவுமே மனத்தைக் கவ்வி இழுக்கும் ரம்மியங்கள். உணவு முறையால், உடல்களால், விருந்தோம்பலால், விழிப்புணர்வால், சமூகக் கட்டமைப்பால், எழுச்சியால், எளிமையால், தேவைகளால் பிற மாநிலத்த வரிடமிருந்து பெரிதும்
மாறுபட்டவர்கள் என்பதை, கதைத் தளங்களிலும், வருணனைகளிலும் காண முடிகிறது.

கதைக் களங்களும், தளங்களும் கூட மாறுபடுகின்றன. பல கதைகளினுாடே புதிய நறுமணங்களை நுகர முடிகிறது. ‘‘வெளித்தனத்தின் மறுபக்கம்’’ (பக். 19) கதையில் பறவைகளைக் கண்டால் கொல்லும் வெறித்தனத்தால், ஒரு மனித உயிரையே பறித்துவிடும் பயங்கரம். ‘‘இன்னொரு மோதி’’ (பக். 47) கதையில், திக்கற்ற தாயொருத்தி தன் செல்லக் குழந்தையை வண்டிச் சக்கரத்தில் பறி கொடுத்துவிடும் அழுகை, ‘‘திரு.கே…’’ கதையில் (பக். 79) நன்றாயிருந்த ஒருவன் அரசியல் பதவிக்காக ஒழுக்கம் கெட்டுப் போகும் அவலம்.

‘‘நியாயத்தின் கணக்கீடு’’ கதையில் (பக். 182) பழைய ஜீப்பை பேரம் பேசுவதில் இழையோடும் தத்துவம் கலந்த நகைச்சுவை. யாவுமே மனதில் நிற்கின்றன. கதைகளின் நீளத்தாலும், மொழி பெயர்ப்பு பலவீனத்தாலும், சில கதைகளின் ஓட்டத்தில், அயர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

– கவிஞர் பிரபாகர பாபு.

நன்றி: தினமலர், 2/10/2016.

Leave a Reply

Your email address will not be published.