புது வீடு கட்டலாமா

புது வீடு கட்டலாமா, சி.எச். கோபிநாத ராவ், பிராம்ப்ட் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.

கட்டடக் கலை நிபுணரான இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், 5 நூல்களை அழகுத் தமிழிலும் எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்நூல். வீடு கட்டி, பிறர் மதிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குமே உண்டு என்றாலும், ஓரளவு பொருளாதார வசதி பெற்றவர்களுக்கே இது சாத்தியமாகும். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல், யாரிடம் சென்று விசாரிக்கலாம் என்பதும் புரியாமல் திணறும் நிலை பலருக்கு உண்டு. அத்தகையவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இந்நூலை வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.

குறிப்பாக இந்நூலில், வீடு கட்ட மனை வாங்குவது எப்படி என்பதில் தொடங்கி, பத்திரப் பதிவு செய்வது, வீடு கட்டுவதை கான்ட்ராக்டரிடம் ஒப்படைப்பது சரியா, தானே கட்ட முனைவது சரியா, தானே முனைவது என்றால் வீடு கட்டத் தேவையான புள்ளிக் கணக்குகள், மனையைச் சீர்படுத்துவது, அஸ்திவாரப் பணிகளை மேற்கொள்வது, சிமென்ட், மணல், ஜல்லி – கான்கிரீட், கம்பி, ஜன்னல், கதவு, கூரை, வர்ணம்… போன்றவற்றை வாங்குவது, குடிநீர் மற்றும் கழிவு நீர் ஏற்பாடுகள், மின்சார இணைப்புகளை உருவாக்குவது… இப்படி பல்வேறு விதமான விபரங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் எளிய தமிழ் நடையில் அதற்குரிய வரைபடங்கள், மற்றும் அளவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

வீடு கட்ட முனைபவர்களுக்கு மட்டுமின்றி, இத்தொழில் சார்ந்தவர்களுக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 12/10/16.

Leave a Reply

Your email address will not be published.