ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், வன்முறை தொடர்பான ராஜீவின் சர்ச்சைக்குரிய கருத்து, இந்திராகாந்தி பெற்றிடாத வெற்றியை 1984-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஜீவ் பெற்றது என முதல்பாதியில் சம்பவங்கள் வேகமாக நகர்கின்றன. 

பிரதமரான பிறகு ராஜீவ் எதிர்கொண்ட சவால்களைப் புதிய கண்ணோட்டத்துடன் பிற்பகுதி விவரிக்கிறது. ஆபரேஷன் புளூ ஸ்டாருக்குப் பிறகு சீக்கியர்களின் நம்பிக்கையைப் பெற ராஜீவ் மேற்கொண்ட நடவடிக்கைகள், வங்கதேசத்தில் இருந்து வெளியேறியவர்களால் அஸ்ஸாமில் நிகழ்ந்த போராட்டங்கள்-ராஜீவ் அரசு மேற்கொண்ட ஒப்பந்தம், ஷா பானு வழக்கு, அது சார்ந்த சர்ச்சைகள் என ஆய்வுக் களம் நீண்டுகொண்டே போகிறது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனான ரகசிய ஒப்பந்தம், இலங்கை அரசுடன் ராஜீவ் அரசு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம், அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிய விவகாரம், அதனால் ஏற்பட்ட பிரச்னைகள் என இலங்கைத் தமிழர் பிரச்னை சார்ந்த விஷயங்களும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. 

போஃபர்ஸ் பீரங்கி ஊழல், 1989 தேர்தல் தோல்வி என நீளும் வரலாறு, 1991-இல் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் படுகொலை செய்யப்படும் வரை நீடிக்கிறது. புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்கமுடியாதவாறு நிகழ்வுகளை நகர்த்திச் செல்கிறார் நூலாசிரியர். 

நன்றி: தினமணி, 21/3/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.