சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ.

முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம்.

இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை.

ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்களைப் படித்தால், சலிப்பு தட்டும். அந்த சலிப்பு ஏற்படாத வகையில், அவர்களில் குறிப்பிட்ட சிலரின் முழுத் தகவலையும், வாக்கேயக்காரர் ஒரு பாட்டு எழுதினால், அதை எந்த நோக்கில் எழுதியுள்ளார், அதன் அர்த்தம் என்ன என்பது உட்பட, பல நுணுக்கமான தகவல்களை எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார் பரத்வாஜ்.

அந்த வாக்கேயக்காரர்களில், பாரதியையும், கண்ணதாசனையும் அடக்கியுள்ளது மாபெரும் ஆச்சரியமே. அவர்கள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தியதால், மிகச் சிறந்த பாடலாசிரியர்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

இதிலிருந்து, சமூகத்தில் மக்களை ஈர்த்தவர்கள் என்ற கோணத்தில், இந்நூலாசிரியர் பகுப்பாய்ந்து, வாக்கேயக்காரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது புரிகிறது. படிக்க மிக எளிதாகவும், அரிய தகவல்களுடனும் உள்ள இந்த புத்தகம், இசைப் பிரியர்களுக்குப் பிரியமானதாக இருக்கும்.

– ஆர்.வீராசாமி.

நன்றி: தினமலர், 19/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *