தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு- இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்- தமிழில்: எஸ்.டி.ஜெயபாண்டியன், அடையாளம்,  பக்.512. விலை ரூ.480.

அமெரிக்காவைச் சேர்ந்த நூலாசிரியர் தனது ஆய்வுப் படிப்புக்காக 1960 இல் தமிழகம் வந்து பலரைச் சந்தித்து, மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு THE
NADARS OF TAMILNADU என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமே இந்நூல்.

ஒரு காலத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தினர், தங்களுடைய உழைப்பாலும், முயற்சியாலும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான செயல்களாலும் எவ்வாறு முன்னேற்றம் அடைந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது.

நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவுடைமையாளர்களாகவும், பனைத் தொழிலாளர்களாகவும் முதலில் இருந்த நாடார்கள், ஆங்கிலேய ஆட்சியின்போது ஏற்பட்ட சாலைகள், ரயில் போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாக விவசாயப் பணிகளை விட்டுவிட்டு வணிகத்தில் ஈடுபட்டது, பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்தது, வெளிநாடுகளிலும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது என நாடார் சமூகத்தின் வளர்ச்சியை மிக ஆழமாகவும், விரிவாகவும் இந்நூல் ஆராய்கிறது.

நாடார்களின் சங்கம் மகமை என்ற தன்னார்வப் பொதுநலநிதியைத் திரட்டி, பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், தங்கும் விடுதிகளை ஏற்படுத்தியதன் மூலம் தன் சமூக உயர்வுக்குப் பாடுபட்டிருக்கிறார்கள். உறவின்முறை என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூகத்தின் தேவைகள், வழக்குகள், பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டனர் என்று இந்நூல் கூறுகிறது.

இந்தியாவில் சாதி அமைப்பு, அவற்றின் தன்மை, தொழிலுக்கும் சாதிக்கும் உள்ள உறவு, சமூக நிலைகள் வெளியில் மாற மாற அவை சாதிகளின் நடைமுறைச் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல ஆழமான விஷயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய நாடார்களின் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்களும் சொல்லப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றை ஆராய்வதாக மட்டும் இல்லாமல், இருநூறு ஆண்டுகால சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது.

நன்றி: தினமணி, 18/3/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *