தலைவலியும் மருத்துவமும்
தலைவலியும் மருத்துவமும், சு.நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.102, விலை ரூ.90
தலைவலி ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி. உடலில் பல்வேறு உறுப்புகளில், உடலின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே தலைவலிக்குக் காரணம் என்கிறார்.
ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் காரணமாகத் தோன்றும் தலைவலி, காது வலியினால் ஏற்படும் தலைவலி, மூளையில் ஏற்படும் நோய்களினால் ஏற்படும் தலைவலி, கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் உருவாகும் தலைவலி, இன்சுலின், தைராய்டு போன்ற சுரப்புநீர்கள் சரியாகச் சுரக்காவிட்டால் ஏற்படும் தலைவலி, மன அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி, மது அருந்துவதால் ஏற்படும் தலைவலி என தலைவலிக்கான பல்வேறு காரணங்களை இந்நூல் விளக்குகிறது.
தலைவலியைத் தடுக்க யோகாசனம், தியானம் போன்றவை எந்த அளவுக்குப் பயன்படும்? தலைவலி வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பனவற்றையும் நூல் விளக்குகிறது.
நொடிப் பொழுதில் பொறுக்க முடியாத அளவுக்கு தலைவலி ஏற்பட்டால், இருமும்போது, தலைகீழாகக் குனியும்போது தலைவலி ஏற்பட்டால், காய்ச்சலுடன் தலைவலி, கழுத்து விரைப்புடன் தலைவலி உள்ளிட்ட தலைவலிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்; இல்லையென்றால் ஆபத்து என்று எச்சரிக்கிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 26/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818