தமிழிசை : ஓர் எளிய அறிமுகம்

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம், புதுகை கு.வெற்றிச்சீலன், களம் வெளியீடு, விலை: ரூ.20.

தமிழ்த் தேசிய அரசியல் மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்போடு முழங்கும் கு.வெற்றிச்சீலன், இசை குறித்த ஆய்வுகளில் தோய்ந்து, அறிமுக நூலொன்றை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இசைத்தமிழ் அறிஞரான தஞ்சை ஆப்ரகாம் பண்டிதரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரைக் குறித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பானது தொடர் கட்டுரைகளாக விரிந்து, தற்போது நூல் வடிவம் கண்டிருக்கிறது.

31 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த அறிமுக நூல், சங்க காலம் தொடங்கி பக்திக் காலம் வரையிலும் தமிழிசை வளர்ந்த வரலாற்றையும் இசை நுட்பங்களையும் தமிழிசை வளர்த்த ஆளுமைகளையும் அறிமுகப்படுத்துகிறது. தமிழ் இசை ஆய்வாளர் நா.மம்மதுவின் அணிந்துரை இந்நூலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களின் சாரமாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலில், பழந்தமிழர் இசை மரபிலேயே தமிழ்ப் பண்களுக்கு ராகம் என்னும் பெயர் வழங்கப்பட்டதையும் அப்போது வடமொழியில் அந்தச் சொல் வழக்கில் இல்லாததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் வெற்றிச்சீலன். இன்று நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து மோகன ராகத்தில் அமைந்தது; அந்த ராகம்தான் சங்க காலத்தின் முல்லைப் பண் என்றும் சுவையான தகவல்கள் பலவற்றையும் பகிர்ந்துகொள்கிறார். பண் மெட்டானது ஆளத்தி ஆலாபனையானது என்று தமிழிசைக்கும் பிற செவ்வியல் இசை வடிவங்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை எளிமையாக விளக்குகிறார். வழக்கமாக, தமிழிசை குறித்த நூல்கள் சிலம்புக்கும் தேவாரத்துக்கும் முதன்மை கொடுக்கும். இந்த நூலில் குணங்குடி மஸ்தான் கீர்த்தனைகள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இசையுலகில் அவ்வளவாகப் பேசப்படாத புதுக்கோட்டை மான்பூண்டியாப் பிள்ளையைப் பற்றி தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் வெற்றிச்சீலன். சொந்த ஊர்ப் பாசமாகவும் இருக்கலாம். திருவிழா இசை ஊர்வலங்களின்போது லாந்தர் ஏந்திச் சென்ற மான்பூண்டியாப் பிள்ளையின் கேள்வி ஞானத்தைப் புரிந்துகொண்டு, அவரைத் தனது மாணவராக ஏற்றுக்கொண்டார் தவில் கலைஞர் மாரியப்பா. கஞ்சிரா என்னும் தோலிசைக் கருவியை உருவாக்கியது இந்த மான்பூண்டியாப் பிள்ளைதான். ஒற்றைக் கையாலேயே வாசிக்கப்படும் இந்தக் கருவியானது உடும்பின் தோலிலிருந்து செய்யப்படுவது என்று ஒன்றுதொட்டு ஒன்றாய்த் தகவல்களின் களஞ்சியமாகவும் விரிகிறது இந்நூல். கணிதத்தின் கலையுருவம் இசை என்பது போன்று ஆங்காங்கு எட்டிப் பார்க்கும் கவித்துவ வாக்கியங்கள் வாசிப்பை இனிமையாக்குகின்றன.

நன்றி: தமிழ் இந்து, 8/5/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.