உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ.

சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ ஞான போதத்தின் மாண்பையும் அதில் இடம் பெற்றுள்ள தோத்திரக் கருத்துக்களையும் சூத்திரச் செழும்பொருள் விளக்கங்களையும் இந்நூலில் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். சிவஞான போத செய்யுள்களோடு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், போன்றவற்றில் உள்ள பாடல்களையும் ஒப்பிட்டு விளக்கமளித்திருப்பது சுவையாகவும் எளிதில் புரிந்து கொள்ள உதவுவதாகவும் உள்ளது. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கைப் பற்றிய தகவல்களும் பண்டார சாத்திர நூல்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. சிவஞான போதம் முதல் நூலா, வழி நூலா எனும் சர்ச்சையைப் பற்றி குறிப்பிடும் ஆசிரியர் அது முதல் நூலே என்பதற்கு ஆதாரமாகப் பல சான்றுகளைக் குறிப்பிடுகிறார். எனினும் சிவஞானபோதம் சங்க இலக்கியங்களை அடியொற்றி வந்ததேயன்றி வடமொழி நூலான ரௌரவ ஆகமத்தின் சூத்திரங்களைப் பின்பற்றி அல்ல என்று குறிப்பிடும் நூலாசிரியர் அதற்கும் ஒரு படி மேலேபோய் தமிழில் சிவஞானபோதம் எழுந்தபின் வடமொழி அறிஞர் ஒருவர் சில சூத்திரிங்களை எழுதி ரௌரவ ஆகமத்தோடு இணைத்துவிட்டார் என்று கூறியிருப்பது சரிதானா என்பதை தமிழும் வடமொழியும் அறிந்தோரோ விளக்கவேண்டும். சிவஞானபோதத்தைப் பற்றி மட்டுமல்லாமல், சித்தாந்த சாத்திரங்கள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.  

—-

 

புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப.உதயகுமாரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, பக். 104, விலை 75ரூ.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியாக அறியப்பட்டிருக்கும் சுப. உதயகுமாரன், தனது 21 வயதில் எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து ஆறாண்டுகள் அங்கே வாழ்ந்த அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். எத்தியோப்பியாவில் அப்போதிருந்த ஜனநாயகமற்ற ஆட்சியின் கொடுமைகள், மக்கள் பட்டபாடுகள் எல்லாவற்றையும் நூல் விவரித்துச் செல்கிறது. ஒரு நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு நூலைப் படிக்கும்போது எழுகிறது. ஒரு கம்யூனிச அனுதாபியாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற சுப. உதயகுமாரன், ஆறாண்டுகள் அங்கிருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது, ராணுவ ஆட்சி இந்தியாவின் இன்னல்களுக்கு மாற்றாக இருக்குமோ என்று நினைத்திருந்த நான், நமது சனநாயக ஆட்சி அமைப்பை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்தைப் பெற்றேன். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எப்படி ஒரு நரக அனுபவமாக இருக்கும் என்பதை அனுபவித்த காரணத்தால், இவற்றைக் காப்பாற்ற எதுவும் செய்யலாம், செய்ய வேண்டும் என உறுதி பூண்டேன் என்று கூறுகிறார். வாழ்வில் தகராறுகளே இல்லாமல் பெறப்படுவதல்ல சமாதானம். மாறாக அவற்றை எப்படிக் கையாள்வது எனும் திறமையிலிருந்து கிடைப்பதுதான் அது என்று அவர் சொல்வது இந்நூலின் சாரத்தைக் கூறுவதாக உள்ளது. சிறந்த நூல். நன்றி: தினமணி, 10/6/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *